திங்கள், 12 ஜூலை, 2021

மத்திய அரசுக்கு எதிராக சீறும் நடிகை ரோகிணி. எனக்கு இப்போதுதான் துணிச்சல் வந்திருக்கிறது!

எனக்கு இப்போதுதான் துணிச்சல் வந்திருக்கிறது! - மத்திய அரசுக்கு எதிராக சீறும் நடிகை ரோகிணி
vikatan.com - த.கதிரவன் : எல்லாமே இங்கே பரிணாமம்தான். 10 வருடங்களுக்கு முன்புவரையில், ‘நான் உண்டு; என் வேலை உண்டு’ என்று மட்டுமே இருந்திருக்கிறேன். மத்திய பா.ஜ.க அரசின் சட்டத் திருத்த வரிசையில் சமீபத்திய வரவு... ‘ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு-2021.’ இதன்படி, “மக்களுக்கு ஏற்ற கலைப் படைப்பு எது என்பதை இனி மத்திய அரசே முடிவு செய்யும். மேலும், ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களில்கூட திருத்தம் செய்யவும், படத்தை ஒரேயடியாகத் தடை செய்யவும் முடியும்!’ என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், நடிகையுமான ரோகிணி இந்தப் புதிய சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்துவருபவர்களில் முக்கியமானவர். நாள் முழுவதும் பிஸியாக இருந்தவரால், இரவு 10 மணிக்கு பிறகே நம்மிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து...


‘‘இந்தச் சட்டம் தொடர்பாக, ‘நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்விதத்தில் எடுக்கப்படும் திரைப்படத்தை, மத்திய அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என்று சட்டத்துக்கு ஆதரவான வாதங்கள் கிளம்பியிருக்கின்றனவே?’’

‘‘ஒரு திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்புக்குமே அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்பதை நான் நம்பவில்லை. அப்படியெல்லாம் திரைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், இந்நேரத்துக்கு எவ்வளவோ நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். சமூகத்தில் நடப்பதைத்தான் படைப்பாளிகள் திரைப்படங்களாகப் பதிவு செய்கிறார்கள். சமூகத்தில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுவது தான் கலையின் அடிப்படை. ஆனால், இந்த அடிப்படையையே சிதைத்து, கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில்தான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது போன்ற கெடுபிடிகள் இருந்தால் மாற்றுச் சிந்தனை, முற்போக்கு விஷயங்களைத் திரைப்படங்களில் இனி எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? அதனால்தான் நாங்கள் இதை எதிர்க்கிறோம்.’’

‘‘வீடியோ பைரஸிக்குக் கடும் தண்டனை, வயதுவாரியாகப் படத்தைத் தரம் பிரித்துச் சான்றிதழ் வழங்குவது என இந்தப் புதிய சட்டத் திருத்தத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றனதானே?’’

‘‘படைப்புகளைத் திருடுபவர்களுக்கு தண்டனை என்பது வரவேற்கக்கூடியது. அதேபோல குறிப்பிட்ட திரைப்படத்தை எந்தெந்த வயதினர் பார்க்கலாம் என்ற அனுமதியை வழங்கும் முறையை ‘U/A 7+’, ‘U/A 13+’, ‘U/A 16+’ என வயதுவாரியாக ‘U/A’ சான்றிதழை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஆனால், இதே திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது, சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயதினர் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே... ஆகவே, சட்டத் திருத்தத்தை எதிர்ப்பவர்களை மட்டுப்படுத்துவதற்காகச் சேர்க்கப்பட்ட தித்திப்பான விஷயங்களாகத்தான் இவற்றைப் பார்க்கிறோம்.”

‘‘இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குநரான ஷ்யாம் பெனகல், ‘இந்தச் சட்டத்தால் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை’ என்கிறாரே?’’

‘‘இல்லையில்லை... அவர் அப்படிச் சொல்லவில்லை. ‘இப்போது நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே நன்றாகத்தான் இருக்கிறது. இந்தநிலையில், இந்தப் புதிய சட்டத் திருத்தம் தேவையில்லை’ என்றுதான் அவர் சொல்லவருகிறார். அவர் சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.’’

‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்துக்குத் தமிழக அரசு தடை விதித்தபோது, அவருக்கு ஆதரவாக உங்களிடமிருந்து ஆதரவுக் குரல் எழவில்லையே?’’

‘‘எல்லாமே இங்கே பரிணாமம்தான். 10 வருடங்களுக்கு முன்புவரையில், ‘நான் உண்டு; என் வேலை உண்டு’ என்று மட்டுமே இருந்திருக்கிறேன். அதனால், அன்றைக்கு இது குறித்து நான் குரல் எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு கிடைத்த பல்வேறு அனுபவங்களின் பயனாகவே இன்றைக்கு நான் இந்த அளவுக்குப் பக்குவப்பட்டு படைப்பாளியாக, நடிகையாகப் பரிணாமம் அடைந்திருக்கிறேன். இன்றைக்கு இருக்கும் புரிதலும் துணிச்சலும் அன்றைக்கு இருந்திருந்தால், நிச்சயம் என் எதிர்ப்பையும் பதிவு செய்திருப்பேன்.’’

‘‘சமீபத்தில் ‘திரௌபதி’ திரைப்படத்துக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களே... அது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பது ஆகாதா?’’

‘‘அந்தப் படம் சொல்லவரும் கருத்து சரியானது கிடையாது. ஆனாலும்கூட, அந்தப் படத்தின் இயக்குநர், அவரது கருத்தைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை யாரும் பறிக்கக் கூடாது. எனவேதான், படத்துக்கான எதிர்க் கருத்தை மட்டும் நாங்கள் முன்வைத்தோம். ஆனால், இந்தப் புதிய திருத்தச் சட்டமோ, ‘கருத்தே சொல்லக் கூடாது; மாற்றுக் கருத்தே கூடாது’ என்கிறரீதியில்தான் படைப்பாளிகளைப் பயமுறுத்துகிறது. அதனாலேயே, இந்தச் சட்டத் திருத்தம் ‘கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல்’ என்று கண்டிக்கிறோம்.’’

‘சமீபத்தில், உங்களை அவதூறு செய்துவிட்டதாகக் கூறி ஒரு தனிநபர்மீது நீங்களே காவல்துறையில் புகார் அளித்திருந்தீர்கள்தானே?’’

‘‘ஆமாம். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் கருத்துச் சுதந்திரம். அதற்காக அவதூறான, அநாகரிகமான விமர்சனங்களைவைப்பது கருத்துச் சுதந்திரம் ஆகிவிடாது. அந்த நபர், என்னை மட்டுமல்லாமல் நிறைய பேரை மிகவும் ஆபாசமாகச் சித்திரித்துப் பதிவிட்டிருக்கிறார். அதனால்தான் புகார் அளித்தேன். ஆனால், இந்த ஆபாசப் பதிவுகளையும்கூட, ‘கருத்துச் சுதந்திரம்’ என்று சொல்லக்கூடிய ஒரு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள்தான். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏனெனில், மிகவும் ஆபாசமான வார்த்தைகளில், எந்த நாகரிகமும் இல்லாமல், அந்த நபர் பதிவிட்டிருக்கும் வார்த்தைகள் சம்பந்தப்பட்ட தனிநபரைக் காயப்படுத்துவதாக இருக்கிறது. இதை எப்படி கருத்துச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள முடியும்?’

கருத்துகள் இல்லை: