புதன், 14 ஜூலை, 2021

கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்?

BBC : கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர்.
இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இங்கு உணவு இல்லை, மருந்து இல்லை, சுதந்திரமும் இல்லை” என போராட்டத்தில் ஈடுபட்ட அலெஜான்ட்ரோ என்பவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.



“சர்வாதிகாரம் ஒழியட்டும்”, “விடுதலை வேண்டும்” என்பன போன்ற முழக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன.

“எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்,” என சான் அன்டோனியாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கற்றவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு சீரூடையில்லாத அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை அழைத்துச் செல்வது போலவும், அடிப்பது போலவும், சிலர் மீது மிளகுத் தூள் தெளிப்பானைப் பயன்படுத்து போலவும் சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.

பாதுகாப்புப் படையினருடன் நடந்த தள்ளுமுள்ளுவில் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,போராட்டத்தின்போது அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞருக்கு காயம் ஏற்பட்டது

மிகவும் அரிதான போராட்டத்தையடுத்து, கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

1962-ஆம் ஆண்டில் இருந்து கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை, “பொருளாதாரத்தை முடக்கும் கொள்கை” என்று அவர் சாடினார்.

நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1959-ஆண்டு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த கியூபாவின் எழுச்சியை அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.

“புரட்சியாளர்களே! நீங்கள் வீதிக்கு வந்து போராட உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் அறிவித்தார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக வீதிக்கு வந்து சண்டையிடுமாறு தனது ஆதரவாளர்களை அதிபர் தூண்டி விடுவதாக இந்த அறிவிப்பு கவனிக்கப்படுகிறது.

“சண்டைக்கான அழைப்பு மிகவும் கவலையளிக்கிறது” என லத்தீன் அமெரிக்காவுக்கான அமெரிக்காவின் மூத்த அரசுமுறை அதிகாரியான ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கியூபாவுடன் நீண்ட காலமாகக் கசப்பான உறவைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.

கியூபாவின் மக்களுக்கு ஆதரவாகக் தாங்கள் இருப்பதாகவும், அரசில் இருப்பவர்கள் வன்முறையில் இருந்து விலகி மக்களின் குரலைக் கேட்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

“கியூப மக்கள் அடிப்பையான மற்றும் உலகளாவிய உரிமைகளை துணிச்சலாகக் கேட்கிறார்கள் ” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சூறையாடப்பட்ட கடைகள்

அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் தலைநகர் ஹவானாவின் தென்மேற்கே உள்ள சான் அன்டோனியோ நகரில் ஒரு ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது, விரைவில் நாடு முழுவதும் பரவியது.

பலர் சமூக வலைத் தளங்களில் போராட்டக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினர். அரசுக்கும் நாட்டின் அதிபருக்கும் எதிராக போராட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்கள் அதில் காட்டப்பட்டன.

கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் எளிதில் அடையாளம் காணக்கூடிய சிறிய நகரங்களில்கூட மக்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பது முக்கியத்துவமானது என்பதுடன், போராட்டத்தை வளர்க்கவும் செய்யவும் என்கிறார் பிபிசி ஆன்லைனின் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பிராந்திய ஆசிரியரான் வனீஸா பக்ஸல்ட்டர்.

இன்னொருபுறம் அரசுக்கு ஆதரவான சிலர் அணிவகுத்தபடி “”இந்த வீதிகள் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு சொந்தமானவை” என்று முழக்கங்களை எழுப்பும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொளியை கியூபாவின் வெளியுறவு அமைச்சர் பதிவேற்றியிருக்கிறார்.

காவல்துறையினரின் வாகனங்கள் கவிழ்க்கப்பட்டதையும், வெளிநாட்டு பணத்தில் பொருள்களை விற்கும் அரசுக்குச் சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டதையும் சில சமூக ஊடக இடுகைகளில் காண முடிகிறது. கியூப மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு அரசுக் கடைகள் மட்டுமே வழி. ஆனால் அங்கு விலை மிகவும் அதிகம்.

கியூபாவின் பொருளாதாரம் மிகவும நொடிந்த நிலையில் உள்ளது.. கொரோனாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான சுற்றுலா அழிந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரை, கியூபாவின் மற்றொரு முக்கிய வருவாய் ஆதாரம். ஆனால் இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது.

கியூபாவின் சர்க்கரை உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஸ்கியூபா அமைப்பு,எரிபொருள் பற்றாக்குறை மற்றும் இயந்திரங்களின் பழுது உள்ளிட்டவை சர்க்கரை உற்பத்தி குறைந்து போனதற்குக் காரணங்கள் என்று கூறுகிறது.

பொருளாதாரத்தின் முக்கியமான அம்சங்கள் முடங்கி விட்டதால், அரசின் அன்னியச் செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் பற்றாக்குறையை ஈடுசெய்ய வெளிநாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்யவும் முடியாது என்பதுதான் இன்றைய கியூபாவின் நிலை.

1959ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த க்யூபாவின் அரசை வீழ்த்திய புரட்சிக்கு தலைமை தாங்கியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த புரட்சியில் ராவுல் காஸ்ட்ரோ கமாண்டராக செயல்பட்டார்.

அதன் பிறகு 2006ஆம் ஆண்டு உடல் நலம் மோசமாகும் வரை நாட்டின் அதிபர் பொறுப்பில் இருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதன்பின் அதிபர் பொறுப்பை 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் வழங்கினார். ஃபிடல் காஸ்ட்ரோ 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார். தொடர்ந்து அதிபராக இருந்த ராவுல் காஸ்ட்ரோ கடந்த ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து விலகினார்.

கருத்துகள் இல்லை: