செவ்வாய், 13 ஜூலை, 2021

தமிழ்நாடு அரசின் நீட் ஆய்வுக்குழுவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம்: நீட் கேள்வி எழுப்ப நீங்கள் யார்? .. கரு நாகராஜனுக்கு கண்டனம் ..

Velmurugan P e Oneindia Tamil : சென்னை : நீட் தேர்வின் தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசின் மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? என்று பாஜகவின் கரு.நாகராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதுடன் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்த குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்ததன் மூலம் கரு.நாகராஜனுக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க,
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
அரசியல் கூடாது மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.


அதை மீறும் வகையில் தற்போது தமிழ்நாடு  அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கதல்ல . நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது . ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

எதிரானது அல்ல இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகளை ஆய்வு செய்தால் தான் உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க முடியும் என்று கருத்து தெரிவித்தது.

நீட் தேர்வு இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு  அரசு எந்த விதிவிலக்கும் கோர முடியாது; மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்" என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தரப்பு வாதிட்டது. மேலும் இந்த குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

நல்ல விளம்பரம் தமிழக அரசின் இந்த அறிவிப்பானைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழக அரசு மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்

பின்தங்கியவர்கள் நிலைமை இதையடுத்து ஆய்வு குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசு பள்ளி மாண்வர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை என்றார். இறுதியாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ,மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை என்று கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருத்துகள் இல்லை: