வியாழன், 3 செப்டம்பர், 2020

BC+MBC மக்கள் இடஒதுக்கீட்டில் ஏமாற்றப்படடார்கள்?

Ravishankar Ayyakkannu  :    இந்த ஈரேழு லோகத்தில் ஏமாந்த சோனகிரி ஒருவர் உண்டெங்கில்,

அது நம்ம ஆண்ட பரம்பரை BC+MBC மக்களே.

தமிழ்நாட்டில் BC+MBC இட ஒதுக்கீடு எவ்வளவு?  50%.

ஆனால்,    இதே தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம்

2012 ஆம் ஆண்டு 88 உதவிப் பேராசிரியர்களை வேலைக்கு எடுக்கிறது.

BC+MBCக்கு எவ்வளவு கிடைத்தது தெரியுமா?   வெறும் 12.5%

பொதுப் போட்டியில் 60.23% இடங்களைச் சுருட்டி விட்டார்கள்.

இசுலாமியர்கள், பழங்குடி மக்களுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை.

பொதுவாக,  ஒன்றிய அரசின் கீழ் உள்ள IIT, IIM உள்ள பல்கலைகளில் தான் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அறிவோம்.

ஆனால், இது தமிழ்நாட்டுப் பல்கலைகளிலும் நடக்கிறது.  ஏன்?

88 வேலைகள் இருந்தால் அவற்றில் ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்லை.

88 வேலைகளை 54 துறைகளாகப் பிரித்து ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக 200 புள்ளி சுழற்சி முறையை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

200 புள்ளி சுழற்சி முறையில் முதல் இடம் GEN பிரிவுக்குப் போகும்.

ஆக, ஒரு துறையில் ஒரு இடம் தான் வேலை காலி என்றால் அது GENக்குப் போகும். வேறு யாருக்கும் கிடைக்காது.

இது சரியா என்றால் சரியில்லை தான்.

ஆனால், பல்கலைகளைக் கட்டுப்படுத்தும் UGC இப்படித் தான் இடங்களை விளம்பரப் படுத்தக் கோருகிறது.

அதை அலகாபாத் உயர் நீதிமன்றம் சரி என்றுது.

அதற்கு எதிராக ஒன்றிய அரசு அவசரச் சட்டம் இயற்றி உச்ச நீதிமன்றம் போனது.

ஆனால், உச்ச நீதி மன்றம் அலகாபாத் உயர் நீதி மன்றத் தீர்ப்பு சரி தான் சொல்லி விட்டது.

ஏகப்பட்ட வழக்குகள். இடியாப்பச் சிக்கல்கள்.

விளைவு - 2020லும் சென்னைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பணிக்கு விளம்பரம் வெளியிடுகிறது.

எல்லா இடங்களும் GEN பிரிவுக்குச் செல்கின்றன.

ஒரு இடம் கூட இட ஒதுக்கீடு இல்லை.

ஒரு பேராசிரியர் என்பவர் குறைந்தது 10 ஆண்டுகள் அந்த இடத்தில் இருப்பார் என்றாலும்,

200 சுழற்சி முறையில் படி ஒரு ST அத்துறையில் பேராசிரியராக,

50 முறை * 10 ஆண்டுகள் = 500 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஒரு இசுலாமியர் 15 முறை * 10 ஆண்டுகள் = 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அதுவும் யாராவது கண் கொத்திப் பாம்பாக இருந்து அடுத்த முறை சரியான சுழற்சி முறையில் இடங்களை ஒதுக்குகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

தற்போது பல பத்தாண்டுகளுக்கு ஒவ்வொரு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை இப்படி கண்காணிக்கும் அமைப்பு எதுவும் இல்லை.

ஆகவே, நிச்சயம் முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு.

அதற்கு ஏற்ப,

இந்த விளம்பங்கள் எல்லாம் சொல்லி வைத்தாற் போல், 200 சுழற்சி முறையில் முதல் இடமான GENல் இருந்தே தொடங்குகின்றன.

அடுத்த முறையும் GENல் இருந்தே தொடங்கினால்,

நம்ம நிலை புரோட்டா சூரிக்கு புரோட்டா சுட்டுப் போட்ட கடைக்காரர் மாதிரி தான் ஆகும்.

தமிழ்நாட்டில் எத்தனைப் பல்கலைக்கழகங்கள், அங்கெல்லாம் எத்தனை வேலை வாய்ப்புகள் எத்தனை ஆண்டுகளாகப் பறி போகின்றன என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி எல்லாம் முறைகேடுகள் நடக்கும் போது,

இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான் இட ஒதுக்கீடு தருவீர்கள் என்று யாராவது கேட்டால் எவ்வளவு கடுப்பாக இருக்கும்?

தமிழ்நாட்டின் 69% முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனில்,

UGC போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களின் தலையீடு இல்லாத மாநில சுயாட்சி வேண்டும்!

 

 

கேள்வி: SCA எதிர்ப்பாளர்களுக்கு என்ன தான் பிரச்சினை?

பதில்:

ஒவ்வொரு 100 வாய்ப்புகளிலும் SC மக்களுக்கு 18 இடங்கள் உள்ளன.

இந்த 18 இடங்களில் SCA மக்களுக்கு 3 இடங்கள் கிடைக்கும்.
இந்த மூன்று இடங்கள் முறையே 2, 32, 66 என்ற வரிசையில் கிடைக்கும்.

ஆக, SCக்களுக்கு வரும் முதல் வாய்ப்பே SCAக்களுக்குப் போகிறது, இந்த வரிசையை மாற்ற வேண்டும் என்பது தான் SCA உள் ஒதுக்கீட்டை எதிர்ப்போரின் முக்கியக் குற்றச்சாட்டு.

ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், Group 1,2,3,4 போன்று நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் வேலை உள்ள துறைகளில் இந்த வரிசை ஒரு பிரச்சினையே இல்லை என்பதற்கு ஏராளம் ஆதாரங்கள் தர முடியும்.

ஆனால், இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தாவிட்டால்,
ஒரு சில வேலை வாய்ப்புகளே உள்ள கல்லூரி பேராசிரியர் போன்ற இடங்களில், இது சிக்கல் ஆக இடம் உண்டு என்பது உண்மை தான்.

எப்படி?

இது தொடர்பாக பிற SC மக்கள் வேலை வாய்ப்பில் எதிர்கொள்ளும் அநீதி என்று பல Screenshotகளைச் சுற்ற விடுகிறார்கள்.

அதில் சென்னைப் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு பற்றி மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதி செய்ய முடிந்தது.

ஆகவே, இந்த எடுத்துக் காட்டை எடுத்துக் கொள்வோம்.
இதில் என்ன சிக்கல் என்று பார்ப்போம்.

200 புள்ளி சுழற்சி முறையில் முதல் இடம் பொதுப் போட்டி.
ஆகவே, ஒரே ஒரு வேலை உள்ள எல்லா துறை வாய்ப்புகளும் பொதுப் போட்டிக்குப் போகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் உள்ள துறைகளில் அடுத்தடுத்து SC(A), MBC, BC என்று இடம் ஒதுக்குகிறார்கள்.

ஆக, எல்லா வாய்ப்புகளும் SC(A)க்குப் போகிறது, தங்களுக்கு எதுவும் கிடைப்பது இல்லை என்று பிற SC மக்கள் கருதுகிறார்கள்.

இந்தச் சிக்கலைச் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

SC(A) ஒதுக்கீடு என்பது முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது. அதாவது, தகுதியான ஆள் இல்லாவிட்டால் அது இன்னொரு SC வேட்பாளருக்குத் தான் போகும். காலியாக வைக்க மாட்டார்கள்.

இந்த விளம்பர அறிவிப்பில் வைணவம், சமஸ்கிருதம், பாரசீக மொழித் துறைக்கு எல்லாம் உதவிப் பேராசிரியர் கேட்கிறார்கள். இப்போது தான் மருத்துவம், பொறியியல் எல்லாம் படிக்க வரும் அருந்ததியர்கள் இவ்வாறான சிறப்புத் துறைகளில் படித்திருப்பார்களா என்று எனக்குத் தெரியாது.

அப்படி அங்கே ஒரு தகுதியான அருந்ததியர் இல்லா நிலையில் இந்த வேலை இன்னொரு SCக்குத் தான் போகும். தகுதியான SC கிடைக்கும் வரை அந்த இடம் காலியாகத் தான் இருக்கும்.

இது வேலைவாய்ப்பு அறிவிப்பு தான்.

யாரை வேலைக்கு எடுத்தார்கள் என்று பார்த்தால் தான்,
உண்மையிலேயே பிற SC மக்கள் பாதிக்கப்பட்டார்ளா என்று தெரியும்.

ஆனால், இவ்வாறு SC(A) பிரிவுக்கு மட்டும் கிடைத்துள்ள வாய்ப்புகள் 27.27%.

இது SC மக்களுக்கு வழக்கமாக கிடைக்கும் 18% காட்டிலும் 9.27% அதிகமே ஆகும்.

SC(A) மக்களும் SC தானே! தகுதியான SC(A) ஆள் இல்லாவிட்டால் இந்த இடம் எல்லாம் இன்னொரு SCக்குத் தானே கிடைக்கும்?

ஒட்டு மொத்தமாக 27.27% SC மக்களுக்கு வேலை கிடைத்தது என்று ஏன் யாரும் சந்தோசப்பட மாட்டேன் என்கிறார்கள்?

நிற்க!

நாம் முந்தைய பதிவில் பார்த்த படியே, இந்தக் குளறுபடி எழுவதற்குக் காரணம் 200 புள்ளி roster முறையை தவறாக நடைமுறைப்படுத்துவது தான்.

SC(A)க்கு உள் ஒதுக்கீடு கொடுத்ததோ, அவர்களுக்கு ROsterல் இரண்டாம் கொடுத்ததோ தவறே கிடையாது.

88 வேலை வாய்ப்புகளில் ஒட்டு மொத்தமாக பங்கு கொடுத்து, Rosterஐ முறையாக நடைமுறைப்படுத்தினால் பிற SC மக்கள் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் உரிய % இட ஒதுக்கீடு கிடைக்கும்.

அதை 54 துறைகளாக மாற்றி ஒவ்வொரு துறையிலும் ஒன்றிரண்டு வாய்ப்புகள் என்று தரும் போது இட ஒதுக்கீட்டுச் சம நிலை குலைகிறது.

இது 2012ஆம் ஆண்டு அறிவிப்பு.

2012க்கு முன்னும் பின்னும்

Rosterல் அடுத்தடுத்த இடங்களில் உள்ளவர்களுக்கு அடுத்த முறையும் சென்ற முறையும் வாய்ப்பு தந்தார்களா?

இல்லை, ஒவ்வொரு முறையும் GENல் தொடங்கி SC(A)க்கு மட்டும் வாய்ப்பு போகிறதா?

இதை எல்லாம் அனைத்து ஆண்டுத் தரவுகளைத் திரட்டித் தான் எந்த அளவுக்கு தவறு நடக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்.

முந்தைய பதிவில் சுட்டிய படி இதில் அதிகம் பாதிக்கப்படுவது BC, MBC, ST, BCM மக்களே.

தங்கள் இடத்தை SC(A) மக்கள் அபகரித்துக் கொண்டதாக நினைக்கும் பிற SC மக்கள் தங்கள் கண் முன்னே பொதுப் பிரிவினர் 60.23% இடங்களைச் சுருட்டுவதைக் கண்டு கொள்ளவில்லை.

50% இட ஒதுக்கீடு பெற வேண்டி BC+MBC பிரிவினர் வெறும் 12% பெறுவதைப் பற்றி கவலை இல்லை.

அடடா, எங்களுக்குத் தவறுதலாக கூடுதல் இடங்களைத் தந்து விட்டீர்கள், திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் யாரும் சொல்வதும் இல்லை.

எவன் அழிந்தால் எனக்கென்ன, என் சாதிக்கு முதலில் இடத்தைக் கொடு என்று கேட்டால் அதை நான் சாதி வெறி என்று கூட கூற மாட்டேன்.

ஆனால், உங்கள் போராட்டக் குரலுக்கு ஒரு ஆதரவும் கிடைக்காது.

இப்படி துறை வாரியாக ஒதுக்கீடு கொடுவது என்று சொல்வது UGC. அதை ஆதரிப்பது உச்ச நீதிமன்றம். ஏன் என்றால், இதில் தான் உயர் சாதிகள் நிறைய இடங்களைச் சுருட்டலாம்.

இதற்கு எதிராக ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தும் ஒன்றும் செல்லுபடியாகவில்லை.

இந்தப் பிரச்சினையில் BC, MBC, SC, ST மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

இப்படிச் சுருட்டிக் கொண்டு போகும் அவாளுக்கு எதிராக 97 Vs 3 என்பது மட்டுமே வெற்றிச் சூத்திரம்.

அது தான் திராவிடம்.

மற்ற எல்லாமே நமக்குள் நம்மை அடித்துக் கொண்டு சாக அவர்கள் ஆடும் ஆட்டங்களே!

கருத்துகள் இல்லை: