செவ்வாய், 1 செப்டம்பர், 2020

EMI Moratorium: 2 ஆண்டுகள் நீட்டிக்கலாம் - ரிசர்வ் வங்கி

Vignesh Babu - Samayam Tamil ; EMI மொராடோரியம் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடன் தவணைக்கான மொராடோரியம் காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மொராடோரியம் காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

EMI சலுகை எப்போது தொடங்கியது? 

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் வேகமெடுக்க தொடங்கியபின் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் வருமானம் இழக்கக்கூடிய சூழல் இருந்ததால், மார்ச் மாதம் முதல் மே 31ஆம் தேதி வரை கடன் தவணைகளை செலுத்த கூடுதல் கால அவகாசம் (EMI moratorium) வழங்கப்பட்டது. இதென்ன கடன் தள்ளுபடியா?

EMI moratorium என்பது கடனை காலம் தாழ்த்தி செலுத்த ஒரு வாய்ப்பு மட்டுமே தவிர கடன் தள்ளுபடி அல்ல. உதாரணமாக, நீங்கள் உங்கள் கடனை 6 மாத தவணைகளாக செலுத்த வேண்டுமென்றால், EMI moratorium பயன்படுத்தி 9 மாதங்களில் செலுத்தலாம். இது ஒரு கூடுதல் கால அவகாசம் மட்டுமே தவிர தள்ளுபடி அல்ல.EMI moratorium நீட்டிப்பு மே 31ஆம் தேதியன்று மொராடோரியம் முடிவுக்கு வரவிருந்த சூழலில், மக்களின் நிலை அறிந்து மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் இக்கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது. 

இந்நிலையில் மக்கள் கடன் விவகாரத்தில் என்ன செய்வதென தெரியாத தெளிவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

EMI moratorium மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமெனவும், வட்டி மீது வட்டி வசூலிப்பதை தடுக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனாவால் நெருக்கடியில் உள்ள துறைகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பொருளாதாரம் 23% சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் EMI moratorium இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் எனவும் தெரிவித்தார். எனவே, EMI மொராடோரியம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.

கருத்துகள் இல்லை: