புதன், 2 செப்டம்பர், 2020

அனைவருக்குமானதா ஆன்லைன் கல்வி?.. தொடரும் தற்கொலைகள்,...

 தொடரும் தற்கொலை: அனைவருக்குமானதா ஆன்லைன் கல்வி?

மின்னம்பலம்: கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி ,கல்லூரிகள் தொடர்ந்து ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போனோ அல்லது மடிக்கணினியோ இல்லாத நிலையில் பெற்றோரிடம் அவற்றை வாங்கி தர சொல்லி கேட்கின்றனர்.ஆனால் இந்த ஊரடங்கால், அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் பிழைப்பு என்று வாழும் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தராத சூழ்நிலையில் கஷ்டப்படுகின்றனர்.

கடலூர்

இது மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தும் நிலையில் ஒரு சிலர் தற்கொலைக்கும் முயல்கின்றனர். கடலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற பத்தாம் வகுப்பு மாணவர் ஆன்லைன் வகுப்புக்காகப் பெற்றோர்கள் செல்போன் வாங்கி தராததால் விரக்தியில் தூக்கிலிட்டு ஜூலை 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற கூலித் தொழிலாளியின் மகள் ரித்திகா. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த அவர் தன்னுடைய பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது பெற்றோரால் செல்போன் வாங்கி தர முடியவில்லை. ரித்திகாவுக்கும் அவருடைய தாயாருக்கும் செல்போன் வாங்குவது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ரித்திகாவை அவருடைய தாயார் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரித்திகா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் நேற்று தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நித்யஸ்ரீ கல்லூரியும், இரண்டாம் மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

நித்யஸ்ரீ மட்டுமே ஆன்லைன் பாடங்களை படித்து வந்துள்ளார். மற்ற இருவருக்கும் செல்போன் இல்லாத காரணத்தால் பாடத்தைப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தனித்தனியாக செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளனர். மூன்று பேருக்கும் தனித்தனியே செல்போன் வாங்கித் தர ஆறுமுகத்துக்கு வசதி இல்லை. இந்த சூழலில் ஒரு செல்போனில் சகோதரிகள் மூன்று பேரும் ஆன்லைனில் பாடம் கற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவி நித்யஸ்ரீ விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு கல்வியால் மாணவர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “

அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள் என்பதை நித்யஶ்ரீயின் மரணம் எடுத்துக்காட்டுகிறது. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை மாற்றாகச் சொன்னது அரசு. பள்ளிகளுக்கு மாற்றாக எப்போதும் ஆன்லைன் வகுப்புகள் மாற முடியாது என்பதைத் தொழில்நுட்ப வசதிக்காக மட்டுமே விமர்சிக்கவில்லை. பள்ளிகள் நேரடியாக வழங்கும் பொதுப்பயன்பாட்டை ஆன்லைன் வகுப்புகளால் வழங்க முடியாது என்பதற்காகவும் கல்வியாளர்கள் விமர்சித்து வந்தார்கள்.

அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் என்று சொல்வதற்கு முன்னால், அனைவருக்கும் அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறதா, தேவைப்படும் பொருளாதாரப் பின்புலம் உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து சிந்தித்ததாகத் தெரியவில்லை.

அனைவருக்கும் செல்போன் இருக்கிறதா, அதுவும் ஆன்ட்ராய்டு செல்போனாக இருக்கிறதா, ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் மூவருக்கும் தனித்தனியாக இருக்கிறதா, இணைய வசதி இருக்கிறதா, அந்த வசதி தடையற்றதாக இருக்கிறதா, அந்த இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா, இவை எது குறித்தும் கவலைப்படாமல் 'நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்' என்று அறிவித்ததால் ஏற்பட்ட துயரம்தான் நித்யஶ்ரீயின் மரணம்.

கல்வி என்பது ஏதோ பட்டம் பதவிகளுக்காக அல்ல; அது அனைவரையும் அனைத்துக்குமாக தகுதிப்படுத்தி அதிகாரப்படுத்தும் பொருத்தமான கல்வியாக இருக்க வேண்டும். அத்தகைய தகுதிப்படுத்துதல் கூட, அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சமவாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும், ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும். அனிதாக்களையும் நித்தியஶ்ரீக்களையும் உயிரைப் பறிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இதைச் சொல்வதால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்ப்பதாகப் பொருள் கொள்ள வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன். அதை நோக்கிய நகர்வை அரசு தாமதமின்றி முன்னெடுத்திட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: