புதன், 2 செப்டம்பர், 2020

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

BBC  :கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் துவங்கியவுடன் பொதுப் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சில மாவட்டங்களில் துவங்கப்பட்டபோது தமிழ்நாடு எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை தவிர்த்த பிற மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து எல்லா வகையிலான பொதுப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்தந்த மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவுசெய்தது. ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் துவங்கப்படவில்லை.

இந்த நிலையில் மாநில அரசு புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் திங்கட்கிழமையிலிருந்து அதாவது செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத்திற்குள்ளும் பயணியர் ரயில் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு சென்னை புறநகர் ரயில் சேவைகளுக்குப் பொருந்துமா என்பது தெளிவாக்கப்படவில்லை.

சென்னைக்குள் இயங்கும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஏழாம் தேதியிலிருந்து செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: