வியாழன், 3 செப்டம்பர், 2020

பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்

Mathivanan Maran -  tamil.oneindia.com :   கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்த காலம் தொடர்பாக நார்வே சமாதான தூதராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் மனம் திறந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். 
 ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் படுகொலை செய்ததை பிரபாகரனே தம்மிடம் ஒப்புக் கொண்டதாக பாலசிங்கம் என்னிடம் கூறினார் என்பதும் ஒன்று. அதேபோல் சமாதானப் பேச்சுவார்த்தைகள், மகிந்த ராஜபக்சேவின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பதிவிட்டு வந்தார் எரிக் சொல்ஹெய்ம். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னரும் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக விரிவாக பேசியிருந்த நிலையில் கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிர்ரருக்கு அவர் தற்போது அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரையில் 2002-ல் வலிமையான நிலையில் நின்று கொண்டுதான் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வந்தார். அப்போது ஆனையிறவை கைப்பற்றி யாழ்ப்பாணத்தை புலிகள் தங்கள் வசமாக்கும் நிலைமை இருந்தது

ஆனால் பாகிஸ்தானின் ராணுவ உதவியால் பிரபாகரனின் யாழ்ப்பாண முயற்சி வெற்றி பெறவில்லை. அத்துடன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல்கள் நடத்தி இலங்கை பொருளாதாரத்தை நிர்மூலமாக்கி இருந்தனர் விடுதலைப் புலிகள். இதனால் இலங்கை அரசும் பேச்சுவார்த்தைக்கு வந்தது.


ஒருகட்டத்தில் தன்னாட்சி பிரதேசம், அது தொடர்பான வரையறைகள் என பிரபாகரனின் நகர்வு இருந்தது. மகிந்த ராஜபக்சே கூட, வடக்கு பகுதியை பிரபாகரன் வசம் ஒப்படைத்து புலிகளின் நிர்வாகத்தை நடத்த அனுமதிக்கும் நிலையில் இருந்தார்.
 
இன்னொரு பக்கம் உலக நாடுகள் இலங்கையா, விடுதலைப் புலிகளா? என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்தன. அதில் பெரும்பாலானவை இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருந்தன. 2008-ம் ஆண்டுவரை கூட இலங்கையில் அமைதி திரும்ப வேண்டு என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் 2008-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் நிலைப்பாடு திடீரென மாறியது.


இலங்கை ராணுவ ரீதியாக வெற்றி பெறுவதை இந்தியா விரும்பியது. இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. 2009 இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் தென்னிந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கோ அழைத்துச் செல்லும் திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம்.


அப்படி அழைத்துச் செல்கிற அனைவரையும் புலிகளின் தலைவர்கள் உட்பட அனைவரது பெயரையும் சர்வதேசம் முன்பாக பதிவு செய்து அழைத்துச் செல்வதாகவும் கூறினோம். ஆனால் நார்வேயின் இந்த திட்டத்தை அன்று பிரபாகரன் நிராகரித்துவிட்டார். இவ்வாறு எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை: