புதன், 2 செப்டம்பர், 2020

திமுக பொருளாளர் ஆகிறார் ஆ. ராசா .. தினமலரின் ஆருடம்

தினமலர் : சென்னை : தி.மு.க., பொதுக்குழு, வரும், ௯ம் தேதி கூடுகிறது. அதில், பொதுச் செயலராக துரைமுருகனும், பொருளாளராக ஆ.ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.      தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மறைவுக்கு பின், அவர் வகித்த பதவி, நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. அப்பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக, கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது.வரும், 9ம் தேதி, கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி வாயிலாக, இக்கூட்டம் நடக்கிறது.        கூட்டத்தில், பொதுச்செயலராக, துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் வகிக்கும் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில், இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில், பலத்த போட்டி காணப்படுகிறது.       தி.மு.க., துணை பொதுச் செயலராக, ஐ.பெரியசாமி உள்ளார். எனவே, பொருளாளராக, டி.ஆர்.பாலுவை நியமித்தால், 'ஒரே ஜாதியினருக்கு பதவி' என்ற, விமர்சனம் எழும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொருளாளர் பதவி, டி.ஆர்.பாலுக்கு கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் பொருளாளர் பதவியை எதிர்பார்த்து, காய் நகர்த்தி வந்தனர். ஆனால், தலித் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கொள்கை பரப்பு செயலராக உள்ள, முன்னளாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவுக்கு, பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

நாளை ஆலோசனை?:    தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், நாளை, ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில், புதிய மாவட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில், பூத் கமிட்டிக்கு, 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வரும் சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களின் செலவை குறைப்பதற்காக, 13 பேரை மட்டும் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.நடந்து முடிந்த, உட்கட்சி தேர்தலில், கிளை தலைவர், செயலர், துணை செயலர், பொருளாளர், ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய பதவிக்கு, கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த நிர்வாகிகள் பட்டியலை, தலைமை அலுவலகத்தில், உடனே ஒப்படைப்பது குறித்து வலியுறுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: