சனி, 5 செப்டம்பர், 2020

பாராட்டிய மாப்பிள்ளை- வாழ்த்திய ரஜினி

டிஜிட்டல் திண்ணை: பாராட்டிய மாப்பிள்ளை- வாழ்த்திய ரஜினி

minnambalm :“ரஜினிகாந்த் ஒரு மாதத்துக்கு ஓரிருமுறை ட்விட் செய்வதையும் அதை பலத்த விவாதத்துக்கு உள்ளாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதுபோலவே ரஜினிகாந்த் செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு வெளியிட்ட ட்விட்டரும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு வந்துவிட்டது.திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனபோதும் செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 4 மணியோடு வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்துவிட்டது. அவர்களைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது. இதை செய்திகள் மூலமாக அறிந்துகொண்ட ரஜினிகாந்த் அன்று இரவே ட்விட்டரில் துரைமுருகனுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டார். ’தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த். இதுமட்டுமல்ல... மறுநாள் முரசொலியில் ரஜினியின் வாழ்த்தினை ஒருகட்டம் கட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து என செய்தியாக வெளியிட்டு திமுகவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் அதிகாரபூர்வமாக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முறையான வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம் என்றிருந்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கூட ரஜினியின் வாழ்த்து ஒரு கணம் திகைக்க வைத்துவிட்டது. ரஜினியின் வாழ்த்து செய்தியாக ஊடகங்களில் உலாவந்த பிறகே தமிழக காங்கிரஸ் கமிட்டி செப்டம்பர் 4 ஆம் தேதி துரைமுருகனையும், டி. ஆர்.பாலுவையும் வாழ்த்தியது.

ரஜினியின் இந்த வாழ்த்து திமுகவுக்கும் அவருக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வந்த இறுக்கத்தைத் தளர்த்தியிருக்கிறது என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். ஊரடங்கால் தனது வழக்கமான அரசியல் வட்டார நண்பர்களிடம் போன் மூலமே பேசிவரும் ரஜினி, இந்த மாதத் தொடக்கத்திலும் அதுபோல பேசியிருக்கிறார். தான் வழக்கமான நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தும் குறிப்பிட்ட சிலருக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருந்த ரஜினி, ‘இன்னும் 15 நாள்ல நாம சந்திக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த உரையாடலில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ரஜினி. இப்போதைய திமுக கூட்டணியின் பலம் அதிகரித்திருப்பது பற்றியும் , அதிமுகவில் எடப்பாடியும், பன்னீரும் ஒருவரை ஒருவர் பிரிந்தால் பலவீனமாகிவிடும் என்று உணர்ந்து அரசியல் இருப்புக்காகவே ஒருவரை ஒருவர் ஒட்டியிருக்கிறார்கள் என்பதெல்லாம் பேசி அண்ணாமலை பிஜேபியில் சேர்ந்தது வரை விவாதித்திருக்கிறார் ரஜினி. பத்து நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில் ரஜினி தான் அரசியலுக்கு வருவது பற்றி குறிப்பிடவும் இல்லை, நான் அதுபற்றி அவரிடம் கேட்கவும் இல்லை என்கிறார் ரஜினியின் அந்த நண்பர்.

இந்த உரையாடலைத் தொடர்ந்துதான் ரஜினியிடம் இருந்து வெகு சீக்கிரமாகவே துரைமுருகனுக்கும், பாலுவுக்குமான வாழ்த்துச் செய்தி வந்திருக்கிறது. அரசியலுக்கு வந்தால் கூட நான் சக கட்சிகளுக்கு போட்டியாளனே தவிர பொறாமையாளன் அல்ல... அரசியலுக்கு வரவில்லை என்றால் எப்போதும் போல நான் எல்லாருக்கும் பொதுவானவன் என்ற செய்தியை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த வாழ்த்து அமைந்திருக்கிறது என்கிறார் ரஜினியின் அந்த நண்பர்.

ஏற்கனவே ரஜினி சினிமாவில் நுழைந்து 45 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் ரஜினியை பாராட்டி ஒரு செய்தி அவருக்கு அனுப்பியிருந்தார். ‘ரஜினி போன்றவர்கள் முழு நேர அரசியலுக்குள் வராதவரை அவரை நாம் விமர்சனம் செய்ய வேண்டியத் தேவையில்லை. ஆனால் உதயநிதி போன்றவர்கள் ரஜினியை வீணாக விமர்சிக்கிறார்கள். இது திமுகவுக்குதான் இழப்பு’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருந்தார். இந்நிலையில் ரஜினி திமுக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து சொல்லியிருப்பதன் மூலம் தனக்கும் திமுகவுக்குமான இடைவெளியைக் குறைத்திருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: