திங்கள், 24 பிப்ரவரி, 2020

தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா ... 140 ஆவது பிறந்த தினம் இன்று,,.

Susairaj Babu : பிப்ரவரி 24,, தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா அவர்களின் 140 ஆவது பிறந்த தினம் இன்று,,.
தமிழ்மொழியில் தட்டச்சுப்பொறியை முதன் முதலில் உருவாக்கியவர் அமரர் இ.முத்தையா ஆவார். இவர் யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் 24.02.1880 இல் பிறந்தவர். இவரது தந்தை அமரர் இராமலிங்கம் ஓர் கல்விமான், அத்துடன் ஆறுமுகநாவலரின் சீடர்களில் ஒருவராகவும் இருந்தார்.
முத்தையாவுக்கு ஏழு வயதாக இருக்கும் போதே தந்தையார் இறந்து விட்டார். தாயாரின் பராமரிப்பில் தனது கல்வியைக் கற்ற முத்தையா, 1907இல் மலாயா சென்றார். அங்கு டானியல் போதகர் என்பவரின் தொடர்பு முத்தையாவுக்குக் கிடைத்தது. அவரின் உதவியுடன் புகையிரத இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார். சில நாட்களில் அச்சேவையை விட்டு விலகி, பிரபல வணிக நிறுவனமான 'ஐல்ஸ்பரி அன் கார்லண்ட்' இல் வேலைக்குச் சேர்ந்து, அங்கு 1930 ஆம் ஆண்டு வரை பிரதம எழுதுவினைஞராகப் பணிபுரிந்தார்.
இக்காலப் பகுதியில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், சுருக்கெழுத்து பயின்றார். 1913இல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற சுருக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

அலுவலகங்களில் ஆங்கிலத் தட்டச்சு இயந்திரம் இருப்பது போல் தமிழ் தட்டச்சு இயந்திரம் ஏன் இருக்கக் கூடாது என்று சிந்தித்தார். அன்று முதல் தமிழ் தட்டச்சு விசைப்பலகையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக அறையிலிருந்து 247 எழுத்தின் வடிவத்தை ஒரு புறமும், தட்டச்சின் 46 விசைகளை மறுபுறமும் வைத்து எழுத்துகளை எப்படி விசைகளில் அமைப்பது என்பது பற்றிச் சிந்தித்தார். எனினும் எழுத்துக்களை 72இற்கு மேல் குறைக்க முடியவில்லை.
ஆங்கிலத் தட்டச்சில் இல்லாத நகராவிசையையும் இவரே கண்டுபிடித்தார். இவ்விசைகளை ஜேர்மனியிலுள்ள 'சைடல் அன் நௌமான்' என்ற வியாபார நிறுவனத்திடம் ஒப்புவித்துத் தமிழ் தட்டச்சு பொறிகளை உருவாக்கி பெரும் எண்ணிக்கையில் இறக்குமதி செய்து விற்றார். தாம் அமைத்த விசைப்பலகையில் சிலகுறைகள் இருப்பதையும் கண்டார். அவற்றை நீக்கி 'பிஜோ', 'ஐடியல்' ஆகிய தட்டச்சுக்களை உருவாக்கினார். இவற்றைப் பின்பற்றியே 'ஆர் சி', 'ஏரிக்கா', 'யுரேனியா', 'ஹல்டா' போன்ற தட்டச்சுக்கள் வெளியாகின.
தமிழ் தட்டச்சை உருவாக்கிய அமரர் முத்தையா தமது 79 ஆவது வயதில் அதாவது 11.02.1959இல் காலமானார்.
இன்று தமிழ் தட்டச்சுப் பாவனை மிக அரிதாகி உள்ள போதிலும், அதன் இடத்தை நவீன கணினிகள் பிடித்துள்ளன. கணினியில் பாவனையில் உள்ள தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளில் சில மாற்றங்கள் உள்ள போதிலும், இவரால் கண்டுபிடிக்கப்பட்ட விசைப்பலகையே அடிப்படையாகப் பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சிறப்புகளையுடைய தமிழ் தட்டச்சின் தந்தையான முத்தையாவின் 140 ஆவது பிறந்த தினம் இன்று 24.02.2020 ஆகும்.

1 கருத்து:

Susairajbabu சொன்னது…

சிறப்பு நன்றியுடன்