வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

வேலூர் திமுகவுக்கு துரைமுருகன் கொடுக்கும் தலையிடி ... வீடியோ


மின்னம்பலம : தமிழ்நாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்றாலும், வேலூர் திமுகவின் தலைவர் துரைமுருகன் தான் என்பது அம்மாவட்ட திமுகவில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இது இன்னொரு முறை இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
திமுகவின் வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார் மீது அவரது மனைவி ரம்யா, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ஓர் அதிர்ச்சிப் புகார் அளித்தார். புகார் அளித்துவிட்டு நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
“எங்கள் திருமணம் காதல் திருமணம். அவருக்கு வேறு ஒரு ரிலேஷன் ஷிப் இருந்திருக்கு. அது எனக்குத் தெரியவில்லை. அந்த பெண் அவரை விட 14 வயது மூத்தவர். ஒருகட்டத்தில் அவர்களின் தவறான உறவு எனக்குத் தெரியவந்து நான் தட்டிக்கேட்டதால், என்னை தாக்கினார்கள். நான் திமுக தலைவரிடம் அறிவாலயம் சென்று புகார் கொடுத்தேன். அதையும் தெரிந்துகொண்டு என்னை மிரட்டுகிறார்கள். அதனால் எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்” என்று பதற்றமும் அழுகையுமாக பேட்டி கொடுத்தார் ரம்யா.

இந்த புகார் வேலூர் மாவட்ட திமுகவில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விசாரித்துள்ளார். ஏற்கனவே ரம்யா அறிவாலயம் வந்து புகார் அளித்தும் சாரதிகுமார், திமுக பொருளாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாரதிகுமாரின் செயல்பாடு கட்சிக்கு பெரும் அவப்பெயரைத் தேடித் தந்துவிட்டதால் அவரை நீக்க முடிவு செய்தார் ஸ்டாலின். முரசொலியில் அறிவிப்பும் வெளியிட உத்தரவிட்டார்.

ஆனால் துரைமுருகன் தலையீட்டால்... சாரதிகுமாரை நீக்கியது போல் அறிவிப்பு வெளிவராமல் சாரதிகுமார் குடும்ப சூழலால் விலகிக் கொண்டதுபோல் முரசொலியில் அறிவிப்பு வந்தது. இதைப் பார்த்த திமுகவினர், ‘இப்படிப்பட்ட புகார் வந்தும் கூட சாரதிகுமாரை துரைமுருகன் இந்த அளவுக்குப் பாதுகாக்கிறாரே” என்று தலையிலடித்துக் கொண்டனர்.
இதை மிஞ்சும் வகையில் சாரதிகுமாரின் ஆதரவாளர்கள் அன்று காலையே காட்பாடியில் இருந்த துரைமுருகன் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கை, ‘எப்படியாவது சாரதிகுமார் மீண்டும் வாணியம்பாடி நகர செயலாளர் ஆக வேண்டும்’ என்பதுதான்.
துரைமுருகனை சந்தித்த அவர்கள், ‘எங்க நகரத்தை காலத்துக்கும் பதவியில வைக்கணும்’ என்று கோரிக்கை வைக்க பனியன் போட்டு, துண்டை போர்த்திக் கொண்டு கேஷுவலாக வீட்டில் அமர்ந்திருக்கும் துரைமுருகன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சொன்னேன், அவன் நல்லது பண்றானோ, கெட்டது பண்றானோ எனக்கு அக்கறையில்ல. நான் தளபதியிடம் சொன்னேன் சாரதி எனக்கு வேண்டும், வாணியம்பாடிக்கு வேண்டும் என் பையனை ஜெயிக்க வச்சான், கட்சியை காப்பாத்தினான்” என்றதும் எல்லாரும் கைதட்டுகிறார்கள்.
மீண்டும் பேசும் துரைமுருகன், “அதனால எல்லாரும் பேசாம போங்க. அமைதியா இருங்க. பழையபடி எல்லாம் நடக்கும்” என்று உத்திரவாதம் கொடுக்க, ‘இந்த வார்த்தை போதும்’ என்று கூறுகிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் சென்ற சிலர் துரைமுருகன் சாரதிகுமாருக்கு முழு ஆதரவு அளித்து உறுதி கொடுத்ததை வீடியோ எடுத்து ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டார்கள்.
தலைமையால் நீக்கப்பட வேண்டிய ஒருவரை துரைமுருகன் தலையீட்டின் பேரில் அவராகவே விலகிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அப்படிப்பட்டவர் நல்லவரா, கெட்டவரா என்ற அக்கறை இல்லை என்று சொல்லி அவர் வாணியம்பாடிக்கு மீண்டும் வேண்டும் என்ற துரைமுருகனின் வார்த்தைகள் ஸ்டாலினையே அதிர வைத்திருக்கின்றன.
-ஆரா

கருத்துகள் இல்லை: