வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

குடியாத்தம் திமுக எம் எல் ஏ காத்தவராயன் காலமானார்

திமுகவில் தொடரும் சோகம்: குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!மின்னம்பலம் : குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 58. வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன். 2019 மே மாதம் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையிலும் குணமாகவில்லை. கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் காத்தவராயன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


கடந்த வாரம் காத்தவராயனை திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் இன்று (பிப்ரவரி 28) காலை 9 மணிக்கு காத்தவராயன் உயிரிழந்தார்.
திருமணம் செய்துகொள்ளாத காத்தவராயன், சகோதரர் குடும்பத்துடன் பேரணாம்பட்டில் வசித்து வந்தார். திமுகவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். 2011-16 வரை பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக இருந்தார். அவரது உடல் இன்று மாலை பேரணாம்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி சிறுநீரக பிரச்சினையால் நேற்று காலமானார். இந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் திமுகவினர் மீளாத நிலையில் காத்தவராயனின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் காலமானதால் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: