சனி, 29 பிப்ரவரி, 2020

பேராசிரியர் உடல்நிலை: மருந்தை ஏற்க மறுக்கும் மூப்பு!

பேராசிரியர் உடல்நிலை: மருந்தை ஏற்க மறுக்கும் மூப்பு!மின்னம்பலம் : பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அட்மிட் ஆன திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல்நிலை இன்னும் நிச்சயமற்ற நிலையில்தான் நீடிக்கிறது என்கிறார்கள் மருத்துவ வட்டாரங்களில்.
நேற்று (பிப்ரவரி 28) பகல் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வந்து பேராசிரியரைப் பார்த்தார். கொஞ்ச நேரம் அங்கே இருந்தவர் கண் கலங்கியபடியே புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.15 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அப்பல்லோவுக்கு சென்று பேராசிரியரின் உடல் நிலை பற்றி கேட்டறிந்தார்.

”பேராசிரியருக்கு வயது 98 ஆகிவிட்டதால், மருத்துவர்கள் செலுத்தும் மருந்துகளை ஏற்கும் வகையில் உடல் நிலை இல்லை. மருந்துகளை ஏற்கும் விகிதம் 65% வரைக்கும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் 35% அளவுக்குதான் மருந்தினை ஏற்கும் விகிதம் இருந்தது. வயதாகிவிட்ட காரணத்தால், கொடுக்கப்படும் மருந்துகளும் ஹெவி டோஸ் ஆக இல்லை. ஹெவி டோஸ் மருந்து என்றால் கூட ஏற்கும் விகிதம் குறைவாக இருந்தாலும் வேலை செய்யும். அளவான சக்தி கொண்ட மருந்துகள், குறைந்த விகிதத்திலேயே ஏற்கப்படுவதால் பேராசிரியரின் உடல் நிலை செயற்கை சுவாசத்தில்தான் நீடிக்கிறது” என்கிறார்கள் மருத்துவ வட்டாரத்தில்.
கலைஞரின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய நித்யா, நேற்று மருத்துவமனை வந்து பேராசிரியரைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கிவிட்டார்.
"நான் பேராசிரியர்கிட்ட 3 மாசம் வேலை பார்த்தேன். அப்ப என்னைப் பத்தி தலைவர்கிட்ட எடுத்து சொல்லி, இவன் உங்களுக்கு ரொம்ப சரியா இருப்பான்னு சொல்லி என்னை தலைவர்கிட்ட சேர்த்துவிட்டதே பேராசிரியர்தான்.”என்று தன் நண்பரிடம் சொல்லி கலங்கிக் கொண்டிருந்தார் நித்யா.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: