
வளர்ச்சி குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்ட குவாடன் என்ற சிறுவன், கேலி கிண்டல்கள் தாங்க முடியாமல் ‘தான் மரணமடைய வேண்டும்’ என்று கூறி மனமுடைந்து அழுதார். அதை வீடியோவாக எடுத்த அவருடைய தாயார், அதை இணையத்தில் பகிர்ந்து உருவக் கேலிகளின் பின்விளைவை உலகுக்கு உணர்த்த நினைத்தார். ‘எனக்கு ஒரு கத்தியோ, கயிறோ கொடுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டு அழுத அந்த ஒன்பது வயது சிறுவனின் வார்த்தைகள் ஒவ்வொருவரது மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உருவக் கேலிகள் செய்வதன் பின்னால் இப்படியும் ஓர் ஆபத்து இருக்கிறதா என்ற விஷயம் அனைவருக்குள்ளும் குற்ற உணர்ச்சியையும், ஒருவித பய உணர்வையும் ஏற்படச் செய்தது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் குவாடனுக்குத் தங்கள் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்தனர். இதே வளர்ச்சி குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் பிராட் வில்லியம்ஸ், குவாடனுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் குவாடனுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ‘கோ ஃபண்ட் மீ’ (GoFundMe) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி குவாடன், டிஸ்னிலேண்ட் செல்வதற்காக நிதி திரட்டவும் ஆரம்பித்தார்.
10,000 டாலர்கள் திரட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இதில், 4.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் வந்து குவிந்தது. மூன்று கோடியே நாற்பது லட்ச ரூபாய் இந்திய மதிப்பு கொண்ட அந்தப் பணம் குவாடனின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் டிஸ்னிலேண்ட் செல்வதற்காகக் கிடைத்த பணத்தை ஆதரவற்றவர்களுக்கு வழங்க குவாடன் மற்றும் அவருடைய தாயார் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய அவர்கள், “என் மகனைப் போன்ற வாழ்க்கையை யாரேனும் வாழ்ந்திருந்தால், அவர்கள் டிஸ்னிலேண்டுக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பப்பட மாட்டார்கள். அவனது அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்ட சவால்களை விளையாட்டாக நினைக்க முடியாது. அதே போன்ற வாழ்க்கை யாருக்கும் அமையக் கூடாது.
என் மகனுக்கு நேர்ந்தது என்ன என்று அனைவருக்கும் தெரியும். நமது சமூகத்தில் இதேபோன்ற கேலி, கிண்டல்களால் கறுப்பின, வெள்ளை இனத்தில் எத்தனையோ பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இந்தப் பணத்தை நாங்கள் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப் போகிறோம். இந்தப் பணம் அவர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. அவர்களுக்குத்தான் இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது தெரியும். நாங்கள் டிஸ்னிலேண்டுக்குச் செல்வதை விடவும், இந்தப் பணத்தால் சமூகத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெறுவதுதான் முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளனர்.
கேலி கிண்டல்களால் மக்கள் அடையும் வலியை உணர்த்திப் பாடம் கற்பித்த குவாடன், ‘விளையாட்டுகளை விடவும் வாழ்க்கை எத்தனை முக்கியமானது’ என்ற பாடத்தை மீண்டும் கற்பித்துள்ளார். தனது செய்கையால் மிகுந்த உயரத்துக்குச் சென்று அனைவரையும் நெகிழ வைத்த குவாடனுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக