வெள்ளி, 14 ஜூன், 2019

ரயில்வே பணியாளர்கள் தமிழ் பேச விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கம்


மின்னம்பலம் : ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆகியோர் தமிழில் பேசத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழ் பேச விதிக்கப்பட்ட தடை வாபஸ்!
தெற்கு ரயில்வே அதிகாரி சிவா, அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். ரயில்வே தொடர்பான விஷயங்களை பிராந்திய மொழியான தமிழில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்
”இருப்புப் பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது, ஆட்டின் குரல்வளையைத்தான். கலாச்சாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு" எனப் பதிவிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
 ராமதாஸ், கி.வீரமணி உள்ளிட்டோரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இது குறித்து அவர், ”தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஆணவமாகவும் அடாவடித்தனமாகவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் பேசக் கூடாது, இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு. மேலும் மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடிவருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இது போன்ற சில்லறைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம்” என்று எச்சரித்திருந்தார்.
ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ரயில்வே தெற்கு மண்டலம் அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினை நேரில் சந்தித்து, தமிழில் பேசத் தடை விதிக்கப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற மனு அளித்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப்பெறுவதாகப் பொது மேலாளர் ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார், இது குறித்து அவர், ”மே 17ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை திரும்பப் பெறப்படுகிறது. இந்தச் சுற்றறிக்கை தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த நடைமுறையே தொடரும். அதிகாரிகள் புரிந்துகொள்ளும்படி எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர் ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ரயில்வேயின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியிருக்கிறார்.
“திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி நாங்கள் இங்கு வந்து மனு கொடுத்தோம், எங்களது கோரிக்கையை ஏற்று, சுற்றறிக்கை ரத்து செய்வதாக அறிவித்தனர்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
Venkat Ramanujam : 23 எம்பிகளை வச்சி என்னத்தை கிழிக்க போவுது சார் #திமுக என்போர் கனிவான கவனத்திற்கு ... தமிழில் இனி தெற்கு ரயில்வே அதிகாரிகள்/ ஊழியர்கள் எழுத/ பேச தடை என்ற சுற்றறிக்கை வந்துவிட .. அர் எஸ் பாரதி ராஜ்ச்பா எம்பி , தயாநிதிமாறன் லோக்சபா எம்பி, மற்றும் சேகர்பாபு உள்ளிட்ட சென்னை MLA க்கள் உடன் திமுக வினர் உடனே நேரில் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடல் என்ற பெயரில் அறிவிக்கப்படா முற்றுகையிட .. திமுக தலைவர் M. K. Stalin தலமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்க வைத்து விடாதீர்கள் என சூசக அறிவிப்பை அங்கு குழுமிய திமுகவினர் உறுதியுடன் தெரிவித்துவிட .. மிதியமே பிடரி தெறிக்க மத்திய #novppatcountingPm அரசு தனது சுற்றறிக்கையை வாபஸ் .. தேவையா இன்னமும் நீங்க புடுங்கும் தேவையில்லா இந்த ஹிந்தி காதல் ஆணிகள்

கருத்துகள் இல்லை: