திங்கள், 10 ஜூன், 2019

கிரேசி மோகன் காலமானார் .. சிறந்த நாடக , திரை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் .. மாரடைப்பால் ..

தினமலர் : சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் இன்று (வயது 66) மாரடைப்பால் காலமானார். உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர். சென்னையை சேர்ந்த கிரேஸி 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.
கே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைக்க அவரின் பல படங்களுக்கு வசனங்கள் எழுத ஆரம்பித்தார்.


கமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார். “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” ஆகிய படங்களின் இவரின் நகைச்சுவையை மறக்க முடியாதது.
தமிழ் திரைப்படங்கள்
நடிகராகவும், “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்” ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றவை.




தன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றி உள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, "மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா" போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்க வைத்தவை. இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 நாடகங்களை மேடையேற்றி இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதி உள்ளார்.



சினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல

கருத்துகள் இல்லை: