திங்கள், 10 ஜூன், 2019

'ஜெ'வின் மரணத்திலும், இளவரனின் மரணத்திலும் நேர்மையான விசாரணையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

தமிழச்சி (Tamizachi) : பா.ம.க.வினரால் படுகொலை செய்யப்பட்ட இளவரசன்,
'தற்கொலை'(?) தான் செய்து கொண்டான் என்று காவல்துறை கூறியது. மரணத்தில் மர்மம் இருப்பதாக நம்பியவர்கள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்போதைய முதல்வர் 'ஜெ'விடம் கோரியதன் அடிப்படையில் 'நீதிபதி சிங்காரவேலு ஆணையம்' அமைக்கப்பட்டது.
5 ஆண்டுகள் விசாரணை செய்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விசாரணையின் முடிவை சமர்ப்பித்த அன்றிலிருந்து இன்றுவரை தமிழக அரசு விசாரணை முடிவை வெளியிடவில்லை.
சில தினங்களுக்கு முன் 'ஃபிரண்ட்லைன் ஆங்கில பத்திரிக்கை' அறிக்கையின் இறுதி பகுதியை வெளியிட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கையின் இறுதி பகுதி குறிப்பிடுகிறது. விசாரணை இந்த முடிவுவைதான் சமர்ப்பிக்கும் என்பது அரசியல் நோக்கர்கள் உணர்ந்ததே. ஆனால் தமிழக அரசு விசாரணை முடிவை வெளியிடாததன் நோக்கம் என்ன? பாராளுமன்ற தேர்தலா?

இதே தேர்தல் நேரத்தில் தான் 'ஜெ' அப்போலோவில் கைரேகை வைத்தார் என்று சொல்லப்பட்ட ஆவணம் பரிசோதிக்கப்பட்டதில் அது 'ஜெ'வின் கைரேகை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், 'ஜெ' அப்போலோவில் இருந்த போது ஏராளமான வைரங்களை வாங்கி குவித்தார் என்று கூறப்பட்டது. அந்த வைரங்கள் தான் தேர்தல் நேரத்தில் விற்பனைக்கு வந்து அ.தி.மு.க.வின் தேர்தல் செலவுகளை சரிகட்டியது.
சுயநினைவு இழந்து மருத்துவமனையில் இருந்து கொண்டு அந்த வைரங்களை 'ஜெ' எப்படி வாங்கினார் என்ற விசாரணைக்கு தமிழக அரசு போக தேவையில்லை. ஆனால் 'ஜெ'வின் கைரேகையே கிடையாது என்று தீர்ப்பளித்த பிறகும் அம்மா ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?
முதல்வராக இருந்த 'ஜெ'வின் மரணத்தின் மர்மங்களை எத்தனை அலட்சியமாக 'அம்மாவின் ஆட்சி' புறக்கணிக்கிறதோ, அத்தனை புறக்கணிப்பும் இளவரசனின் மர்ம மரணத்தில் இருக்கிறது. இதில் கூட்டணி அரசியல்வாதிகளின் பங்களிப்புகள் இருக்கும் போது எப்படி நேர்மையான விசாரணையை 'ஜெ'வின் மரணத்திலும், இளவரனின் மரணத்திலும் எதிர்பார்க்க முடியும்?
'நீதிபதி சிங்காரவேலு' விசாரணை ஆணையத்திற்கும், 'நீதிபதி ஆறுமுகசாமி' விசாரணை ஆணையத்திற்கும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இரண்டுமே அரசின் கூலிப் படைகள்!

09/06/2019

கருத்துகள் இல்லை: