வியாழன், 13 ஜூன், 2019

கல்லூரி மாணவி தற்கொலையில் விடுதலை சிறுத்தைகளும் .. பாமகவும் ....

LRJ : ஒரு செய்தி; ஒரு அறிக்கை; ஒரு கேள்வி.. ஒரு கல்லூரி மாணவி இணையத்தில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக இந்த செய்தி சொல்கிறது அறிக்கை:
இதற்கு காரணமானவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேத்ந்தவர்கள் என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர்களின் பெயர்கள், கட்சிப்பதவிகளோடு அவர் குற்றம் சுமத்துகிறார். அவரது அறிக்கை இந்த பதிவின் இறுதியில்.
கேள்வி:
இந்த குற்றச்சாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பதில் என்ன?  இதில் பாதிக்கப்பட்ட பெண் தலித் பெண்ணாகவும் குற்றம் சுமத்தப்படுபவர்கள் ராமதாஸ் கட்சியினராகவும் இருந்திருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தலித் என்ஜிஓக்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகளும் பெரியாரியர்களும் பெண்ணுரிமை மற்றும் ஜாதி ஒழிப்பு போராளிகள் எல்லாம் இப்படித்தான் அமைதியாக இருந்திருப்பார்களா?
இந்நேரம் இதற்காக அவர்கள் எல்லோரும் ஒரு சுற்று பொங்கி முடித்திருப்பார்களா மாட்டார்களா?
ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட விவகாரத்தில் கூட யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறது; அதில் யார் பாதிக்கப்பட்டார் என்று இருதரப்பாரின் ஜாதி பார்த்து பொங்குவது தான் இங்கே தலித்தியம்; பெரியாரியம்; பெண்ணியம் மற்றுமுள்ள முற்போக்கு ஈயங்களா?

இத்தகைய அணுகுமுறையின் பின்விளைவுகள் தமிழ் சமூகத்திலும் தமிழ்நாட்டு அரசியலிலும் எவ்வளவு விபரீதமாக போகும் என்று இந்த ஈயங்களின் போராளி பிரதிநிதிகள் உணர்கிறார்களா? தமிழ்நாட்டில் நடப்பது எதுவும் நல்லதுக்கில்லை என்பது மட்டும் உண்மை. அதுவும் முற்போக்காளர்களின் ஆளுக்கொரு நீதி நேரத்துக்கொரு நியாயம் ஜாதிக்கேற்ற பொங்கல் என்பது முற்று முழுதாக ஆபத்தான போக்கு.
ராமதாஸின் அறிக்கை:
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
பாலியல் சீண்டலை தடுத்ததற்காக இருவர் உயிர் பறிப்பு:
அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை!
கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டதால் அவமானமடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தக் கொடூரச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி பன்னீர், அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார் ஆகிய இருவரும் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவர் மீதும் அங்குள்ள காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. அருகிலுள்ள வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை பிரேம்குமார் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் விக்னேஷ் உதவியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை பழிவாங்க திட்டமிட்டனர். அதுமட்டுமின்றி, ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் நீலகண்டன், அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து விட்டதாகக் கூறி, அந்த படத்தையும் காட்டியுள்ளனர். அத்துடன் அவர் மணம் முடிக்கவுள்ள விக்னேஷை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அவமானம் அடைந்த ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ் அடித்து கொலை செய்யப்பட்டு, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல் தான் விக்னேஷை கொடூரமாக படுகொலை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். நாடக காதல் கும்பலின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நாடக காதல் கும்பலின் அக்கிரமங்கள் அண்மைக்காலமாக அத்துமீறத் தொடங்கி உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் முன்பும், அவற்றுக்கு செல்லும் சாலைகளிலும் நாடகக் காதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூடி நின்று மாணவிகளையும், இதர பெண்களையும் பாலியல் ரீதியாக சீண்டுவது வாடிக்கையாகி விட்டது. அவர்களை எவரேனும் கண்டித்தால் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். வடலூரில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததை தட்டிக் கேட்டதற்காக ஒரு இளைஞரை கொடூரமாக கொலை செய்ததுடன், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் வெளியிட்டு அவரை தற்கொலைக்கு தள்ள முடிகிறது என்றால் அந்த கும்பல் எந்தளவுக்கு வலிமை பெற்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொடுக்கும் சட்டவிரோத பாதுகாப்பும், ஓட்டுக்காக நாடக காதல் கும்பலின் அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்கும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் தான் பெண்களுக்கு எதிரான இந்த சூழலுக்கு காரணம் ஆவர்.
சில வாரங்களுக்கு முன்பு தான் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக திலகவதி என்ற மாணவியை நாடக காதல் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் என்பவன் கத்தியால் குத்தி படுகொலை செய்தான். அந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இப்போது நாடக காதல் கும்பலின் அத்துமீறல்களுக்கு மேலும் இரு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இன்னும் எத்தனை உயிர்களை இந்த கும்பலுக்கு காவு கொடுக்கப் போகிறோம்?
பிறசாதி பெண்களை தேடித்தேடி காதலிக்க வேண்டும், ஒவ்வொரு தலித் மீதும் குறைந்தது 10 வழக்குகள் இருக்க வேண்டும்; அவற்றில் ஒரு வழக்கு கொலை வழக்காக இருக்க வேண்டும், எங்கள் இளைஞர்களிடம் தான் சரக்கும், மிடுக்கும் இருக்கிறது என்பது போன்ற நாடக கும்பல் தலைவர்களின் வெறியேற்றும் பேச்சு தான் இத்தகைய குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடலூர் மாவட்டக் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. இப்போதும் கூட பாதிக்கப்பட்ட மக்கள் விடிய, விடிய மறியல் போராட்டம் நடத்தியும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கடலூர் மாவட்ட காவல்துறை, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதை கைவிட வேண்டும். விக்னேஷை படுகொலை செய்ததுடன், ராதிகாவின் தற்கொலைக்கும் காரணமாக இருந்த நாடக காதல் கும்பலை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கடலூர் மாவட்ட காவல்துறை அதன் நடுநிலையை நிரூபிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: