வெள்ளி, 14 ஜூன், 2019

தமிழ் தெரியாத இந்தி அதிகாரிகளை திருப்பி அனுப்பு.. கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கிய போராட்டம்


c
nakkheeran.in - bagathsingh :     மோடியின் பா.ஜ.க அரசு இந்தியா முழுவதும் ஒரே
மொழி என்பதை அயல்நாடுகளுக்கு காட்டவும், இந்தி தான் பிரதான மொழி என்பதை காட்டிக் கொள்ளவும் கல்வி கொள்கை முதல் அனைத்து மாநில வேலைவாய்ப்புகளிலும் தங்கள் அதிகாரத்தை அழுத்தமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் தங்களின் மாநில சுயாட்சி என்கிற தத்துவத்தை அடகு வைத்துவிட்டு தலையசைத்துக் கொண்டு பச்சைக் கொடி காட்டி வருகின்றனர்.
அதன் பலனாகத் தான் முன்பு மத்திய அரசு வேலைகளில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து குடியேறிய நிலை மாறி தற்போது தமிழ்நாடு அரசு பணிகளிலும் பிற மாநிலத்தவர்கள் அதிகமாக கால் ஊன்றத் தொடங்கிவிட்டனர். அதற்கு 2016ம் ஆண்டும் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் காரணமாக அமைந்துள்ளது. மேலும் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற சரத்தை மாற்றி வேலைக்கு சேர்ந்து 2 ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளலாம் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.


    குஜராத் போன்ற அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வேலை என்ற நிலை தற்போதும் உள்ள நிலையில் தமிழக அரசு வேலைகளை மட்டும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கு தமிழக அரசு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் வங்கிகள், ரயில் நிலையங்களில் தமிழுக்கு இருந்த இடத்தை அழித்துவிட்டு அனைத்தும் ஆங்கிலம், இந்தி என்ற நிலைக்கு கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழத்தில் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தான் 12 ந் தேதி தெற்கு ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று உத்தரவிட்டு செய்திக்குறிப்பு அனுப்பி இருந்தது. அந்த தகவல் வெளியான நிலையில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றாலும். நடைமுறையில் இருந்து வருகிறது.


    இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் வங்கியில் தமிழ் தெரியாத இந்தி மட்டுமே பேசும் வங்கி மேலாளரை திரும்ப பெற்று தமிழ் தெரிந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் திலகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்  முன்னால் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    தமிழ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த எழுதத் தெரிந்த ஒரு கிராமத்தில் உள்ள வங்கியில் இந்தி மட்டுமே தெரிந்த ஒரு அதிகாரியை நியமனம் செய்தால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படி வங்கி அதிகாரி கேட்டு நிவர்த்தி செய்ய முடியும். அதனால் எதைக் கேட்டாலும் அதிகாரி இந்தியில் கேட்க சொல்கிறார். எப்படி நம் பாமர மக்கள் இந்தியில் பேச முடியும். மோடி அரசாங்கம் இந்தியை திணிக்க இப்படி ஒரு முயற்சியில் இறங்கி உள்ளது. அதாவது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான வங்கி, அஞ்சலகம், ரயில்நிலையம் போன்ற இடங்களில் இந்தி அதிகாரிகளை மட்டுமே வைத்து அவர்களுடன் நம் மக்களை உரையாட முடியவில்லை என்று இந்தி கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் என்று தான் இந்திக்கு முன்பு இந்தி அதிகாரிகளை திணித்துவிட்டார்கள். அதனால் தான் சொல்கிறோம் இந்தி அதிகாரிகளை திரும்ப பெறு தமிழ் அதிகாரிகளை நியமனம் செய் என்கிறோம். 

மேலும் இந்த இந்தி அதிகாரிகள் திணிப்பிற்கு காரணம் எடப்பாடி – ஓ.பிஎஸ் அரசுகள் தான். அதாவது மாநில சுயாட்சி என்பதை அறிஞர் அண்ணா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் நடைமுறைப்படுத்தியும் வந்தார். ஆனால் அந்த அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இயங்கும் அண்ணா தி.மு.க தமிழகத்தில் படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு சுயாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைத்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: