புதன், 12 ஜூன், 2019

விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்


டிஜிட்டல் திண்ணை:  விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் டைப்பிங் மோடு காட்டியது. கொஞ்ச நேரத்தில் மெசேஜ் வந்து விழுந்தது.
“நேற்று அனுப்பிய தகவலில் கொஞ்சத்தை மட்டும் இங்கே ரீகால் செய்கிறேன். ‘ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் வெடித்தால் அது உள்ளாட்சித் தேர்தலில் கட்சியைதான் பாதிக்கும். ஏற்கனவே பெரும்பாலான நிர்வாகிகள் நம் பக்கம் இருக்கும்போது இன்னும் பக்காவாக தயார் ஆகி பொதுக்குழுவில் நேரடியாக நமது ஆதரவை நிரூபிச்சுக்கலாம். இந்தக் கூட்டத்துல பிரச்சினை ஆச்சுன்னா பன்னீர் தரப்பும் வேற மாதிரி மூவ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதனால நாளைய கூட்டத்தை அமைதியா கடந்து போறதுதான் நல்லது’ என்று எடப்பாடிக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இதன் பிறகே எடப்பாடி நாளை ஒற்றைத் தலைமை- இரட்டைத் தலைமை பிரச்சினையை கையிலெடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் பற்றி பேசினால் மட்டுமே போதும் என்றும் கருதுகிறார்.

தவிர, டெல்லியில் இருந்து வந்த தகவலை அடுத்து ஓ.பன்னீரிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘நாளைக்கு கூட்டத்துல எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது.அப்படி வந்துட்டால் அது ஆட்சிக்குதான் ஆபத்தா போயிடும். ஆட்சி போயிருச்சுன்னா அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது. அதனால நாளைக்கு கூட்டத்தை எப்படி அமைதியா நடத்தணும்னு நாம ரெண்டு பேரும் சேர்ந்து உட்காந்து பேசி ஒரு முடிவெடுப்போம் வாங்க’ என்று அழைத்திருக்கிறார். இதற்கு பன்னீரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அனேகமாக இன்று இரவு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் உட்கார்ந்து நாளைய கூட்டத்தை பிரச்சினை இல்லாத வகையில் நடத்துவது பற்றி பேசுவார்கள் என்கின்றன அதிமுக தலைமைக் கழக வட்டாரத் தகவல்கள்.
நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொன்னதுதான் இன்று அச்சு அசலாக அப்படியே அதிமுக தலைமைக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்திருக்கிறது.
முதல்வர் வருவதற்கு முன்பே ஓ.பன்னீர் செல்வம் தலைமைக் கழகத்துக்கு காலையில் வந்துவிட்டார். கழகத்தில் தன் அறையில் இருந்தார் அவர். கொஞ்ச நேரம் கழித்து எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்துக்கு வந்தபோது, ‘அடுத்த பொதுச் செயலாளரே வருக’ என்று சிலர் கோஷம் எழுப்ப இது ஒ.பன்னீர் காதுகளிலும் விழுந்தது. ஒற்றைத் தலைமை பற்றி மதுரையில் பேசிய ராஜன் செல்லப்பா தலைமைக் கழகத்துக்கு வந்தபோது நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரும் அவரை நெருங்கிக் கை கொடுத்து, ‘நல்லா சொன்னீங்க தலைவா...’ என்று பகிரங்கமாக பாராட்டினர்.
காலை 10.45 மணிக்கு முதல்வரும், துணை முதல்வரும் கூட்டம் நடந்த அரங்கத்துக்கு வந்தார்கள். அதற்கு முன்னரே மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் வந்துவிட்டனர். தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று பொதுவெளியில் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம் வரவில்லை. ராஜன் செல்லப்பாவின் போர்க்குரலை ஆதரித்து ஓ.பன்னீருக்கு எதிராக பேசிய குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனும் கூட்டத்துக்கு வரவில்லை. அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் வரவில்லை. சில சட்டமன்ற உறுப்பினர்களும் வரவில்லை.
கூட்டம் தொடங்கியதுமே எழுந்த எடப்பாடி பழனிசாமி, ‘எல்லோரும் பேசினால் சலசலப்பு வரும். அதனால் வழக்கம்போல அவைத் தலைவர் உரையாற்றுவார். அதன்பின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பேசுவார்கள். பின் இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பேசுவார்கள். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என அறிவித்துவிட்டார்.
இதைக் கேட்டு கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. பின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரம்பலூர் மக்களவை வேட்பாளரான என்.ஆர். சிவபதி எழுந்து, ‘எங்களுக்கும் வாய்ப்பு வேணும். நாங்களும் பேசணும்’ என்று குரல் எழுப்ப அதை மேடையில் யாரும் கண்டுகொள்ளாமல் மதுசூதனன் பேச ஆரம்பித்தார்.
‘அதிமுகன்னா தொண்டர்களால் உருவான கட்சி. ஆனால் இப்ப தொண்டனுக்கு எந்த மதிப்பும் இல்லையோனு ஒரு குறை இருக்குது. இன்னிக்கு இருக்கிற மாவட்டச் செயலாளர்கள் யாரும் தொண்டனை மதிக்கறதே இல்லை. அவங்கவங்களுக்கு வேண்டியப்பட்டவங்களுக்கு மட்டும் செஞ்சு கொடுக்குறாங்க. ஆனா, தொண்டர்களை யாரும் கண்டுக்கறதில்ல. நீங்க மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கும் மதிப்பை தொண்டனுக்கு கொடுக்கணும். அப்பதான் கட்சி கட்சியா இருக்கும்’ என்று பேசிக் கொண்டே போக, உட்கார்ந்தபடியே ஓ.பன்னீர் அதற்கு பதிலளித்தார். ‘தொண்டர்களின் கருத்தை நிச்சயமாக மதிப்போம். அதற்கான காலமும் நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது’ என்று பதிலளித்தார்.
மதுசூதனன் பேச்சுக்குப் பின் கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் பேசினார்கள். அவர்களது பேச்சும் வழக்கமானதாகவே இருந்தது. அவர்களை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
‘தேர்தல் தோல்வி பற்றி ஆராய வேண்டிய கட்டாயத்துல இருக்கிறோம். அம்மாவின் மறைவுக்குப் பின் கட்சியும், ஆட்சியும் சிறப்பா செயல்பட்டுக்கிட்டு வருதுனு நினைச்சோம். ஆனா மக்களுக்கு ஏதோ குறை இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிச்சு சீக்கிரமா நிவர்த்தி பண்ணனும். இந்தத் தேர்தல் மாதிரி உள்ளாட்சித் தேர்தல்லையும் கோட்டை விட்டுடக் கூடாது. அதுக்கு நாம எல்லாரும் ஒத்துமையா செயல்படணும். அதுக்கு என்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்வோம்’என்று பூடகமாகவே பேசினார் எடப்பாடி.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் கடைசியாகப் பேசினார் ஓ.பன்னீர். அப்போது அவர் ஆரம்பத்தில் மதுசூதனன் பேசிய பேச்சில் இருந்தே தன் பேச்சைத் தொடங்கினார். ‘அவைத் தலைவர் அண்ணன் மதுசூதனன் சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன். தொண்டர்களைக் கேட்டு முடிவெடுக்கும் நேரமும் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் காலத்தில், அம்மா காலத்தில் எப்படி தொண்டர்களின் கருத்தறிந்தே செயல்பட்டார்களோ அதுபோலவே இனியும் கட்சி தொண்டர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்தறிந்து முடிவெடுக்கும் நேரம் கனிந்துகொண்டிருக்கிறது. விரைவில் இது தொண்டர்களின் கட்சி என்பது நிரூபிக்கப்படும்’ என்று பேசினார்.

பலரும் கருத்து சொல்ல தடுக்கப்பட்ட நிலையில், பேசிய ஐவரில் மதுசூதனனும், ஓ.பன்னீரும் மட்டும் தொண்டர்களுக்கு மதிப்பு வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள். அதாவது இதன் உட்பொருள் என்னவெனில் தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் மதுசூதனன், ஓ.பன்னீர் இருவரின் ஒரே கருத்தும். இன்று காலையில் அதிமுக தலைமைக் கழக பகுதியில் பொதுச் செயலாளர் எடப்பாடி என ஒட்டப்பட்ட போஸ்டர்க்ளும், எடப்பாடியை வரவேற்கும்போது பொதுச்செயலாளர் என எழுப்பப்பட்ட கோஷங்களும் ஓ.பன்னீரைக் கடுமையாக காயப்படுத்தியிருக்கின்றன.
இதற்குப் பின்னர்தான் கட்சியில் தொண்டர்களுக்கு மதிப்பில்லை என்று ஓ.பன்னீர் ஆதரவாளரான மதுசூதனன் தன் முதல் உரையில் பேசியிருக்கிறார். பன்னீரும் இதற்கு பதிலளித்து, விரைவில் தொண்டர்கள் முடிவெடுக்கும் காலம் கனியும் என்று தனது நிறைவுரையில் பதில் அளித்திருக்கிறார். ஆக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி தொண்டர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே மதுசூதனன், பன்னீர் ஆகிய இருவரின் பேச்சுக்குப் பின்னாலும இருக்கிறது. இனிவரும் காலங்களில் பன்னீரின் முழு காய் நகர்த்தலும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை ஒட்டியே இருக்கும் என்றும், அதற்காக மீண்டும் தனது ஆதரவாளர்களை தொடர்ந்து சந்திக்கப் போகிறார் என்றும் கூறுகிறார்கள் பன்னீர் தரப்பினர்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: