சனி, 15 ஜூன், 2019

சேத்துப்பட்டு .. “சுரேந்தர் இப்படி செய்வாருன்னு கனவில் கூட நினைக்கவில்லை” தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்

சேத்துப்பட்டு சம்பவம்; “சுரேந்தர் இப்படி செய்வாருன்னு கனவில் கூட நினைக்கவில்லை” தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால் வெட்டிவிட்டான்'' என்று தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி(வயது 26). இவரது தந்தை பெயர் வீரமணி. பட்டதாரியான இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அந்த பணியில் சேர்ந்தார். சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவரும் சுரேந்தர்(27) என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்ததாக தெரிகிறது. சுரேந்தரின் தந்தை பெயர் விஜயராகவன். இவரும் ஈரோடு மாவட்டம் ரூபின் பாக் பகுதியைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் ஈரோட்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.


நேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து சேத்துப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தார். இருவரும் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உட்கார்ந்து பேசிய அவர்கள் பின்னர் நின்று கொண்டு சத்தம் போட்டு பேசினார்கள். அப்போது இரவு 7.50 மணி இருக்கும். உச்சக்கட்ட மோதலில் எதிர்பாராதவிதமாக சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கையில் எடுத்து தேன்மொழி மீது பாய்ந்தார். அவரை கீழே தள்ளி சுரேந்தர் அரிவாளால் வெட்டினார்.

இதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்தது. உடனே சுரேந்தர் அந்த ரெயில் முன் பாய்ந்தார். ஆனால் ரெயில் என்ஜின் சற்று முன்னால் சென்றுவிட்டது. சுரேந்தர் ரெயில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் அவரும் உயிருக்கு போராடினார்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் காதல் ஜோடியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அலறி அடித்து ஓடினார்கள். தேன்மொழியை வெட்டிய அரிவாளும் அங்கேயே கிடந்தது.

இதுபற்றி பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் மற்றும் போலீஸ் படையோடு சேத்துப்பட்டு ரெயில் நிலையத்துக்கு விரைந்தார். தேன்மொழி உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு தாடை மற்றும் முகத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சுரேந்தர் அரசு ராஜீவ்காந்தி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு சுயநினைவு வரவில்லை.

பேருந்தில் அறிமுகம் 

இந்தநிலையில்,  எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது, ``நான் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போதுதான் சுரேந்தரைச் சந்தித்தேன். அவர் வேறு ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். பஸ்சில் எனக்கு அறிமுகமான சுரேந்தர் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நானும் அவரைக் காதலித்தேன்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் அரசு தேர்வு எழுதினேன். அவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு வேலை கிடைத்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னை வந்தேன். இந்த சமயத்தில் என்னை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டு என் வீட்டுக்கு சுரேந்தர் வந்தார். என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசினார்.

பெற்றோர் சத்தியம் வாங்கினர்

அப்போது என் பெற்றோர் சில காரணங்களுக்காக என்னை சுரேந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க முன் வரவில்லை.  இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என்னை சுரேந்தருடன் பேசக் கூடாது எனப் பெற்றோர் சத்தியம் வாங்கிக் கொண்டனர். இதனால் சுரேந்தருடன் பேசுவதை தவிர்த்து வந்தேன். இருப்பினும் சுரேந்தர் என்னுடன் பேச பலதடவை முயற்சி செய்தார்.

இந்தச் சமயத்தில்தான் கடந்த 13-ம் தேதி ஈரோட்டிலிருந்து சுரேந்தர் போன் செய்தார். அப்போது அவர், உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், வேண்டாம் என்று கூறினேன். இருப்பினும் 14-ம் தேதி சென்னையில் இருப்பேன் என்று சுரேந்தர் கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். வழக்கம் போல வேலை முடிந்து நான் விடுதிக்குச் செல்ல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தேன். என்னைப்பின்தொடர்ந்து சுரேந்தர் அங்கு வந்தார். ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

சுரேந்தர் இப்படி செய்வாருன்னு  கனவில் கூட நினைக்கவில்லை

அப்போது என் நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனச் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது நான், என் பெற்றோரின் எதிர்ப்பை மீறி என்னால் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். 

இந்தச்சமயத்தில்தான் அரிவாளை திடீரென எடுத்த சுரேந்தர், எனக்கு கிடைக்காத நீ, உயிரோடு இருக்கக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியபடி என்னை வெட்டினார். நான் சுதாரிப்பதற்குள் அரிவாள் வெட்டு விழுந்தது. என்னுடைய இடது புற தாடையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.  அடுத்து அவர், அரிவாளால் வெட்டியபோது அதைக் கையால் தடுத்தேன். இதனால் கையிலும் வெட்டு விழுந்தது. சுரேந்தர் இப்படி செய்வாருன்னு என் கனவில்கூட நினைக்கவில்லை. என் சத்தம் கேட்டு சிலர் அங்கு ஓடிவந்தனர்.  அதற்குள் நான் கீழே சரிந்தேன்.  அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது" 

இவ்வாறு தேன்மொழி  கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் சுரேந்தர் தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயடைந்த சுரேந்தர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடமும் போலீஸார் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர், `தேன்மொழியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்று மட்டும் கூறியுள்ளார்.

காதலுக்காக இப்படிச் செய்துவிட்டானே

எழும்பூர் ரெயில்வே போலீசார், சுரேந்தர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோட்டில் உள்ள சுரேந்தர் மற்றும் தேன்மொழியின் பெற்றோருக்கு எழும்பூர் ரயில்வே போலீஸார் நேற்றிரவு போனில் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தேன்மொழிக்கு அவரின் பெற்றோர்கள் ஆறுதல் கூறினர். சுரேந்தரின் உறவினர்கள் காதலுக்காக இப்படிச் செய்துவிட்டானே என்று புலம்பியபடி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளனர்.

தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: