சனி, 18 மே, 2019

எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!" திருவல்லிக்கேணி குள்ளம்மாள் பாட்டியின் கதை

``எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!
vikatan.com - வெ.வித்யா காயத்ரி வி.ஶ்ரீனிவாசுலு :
 ஒருவர் மட்டுமே படுக்கும் அளவிலான வீடு. வீட்டின் மேற்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டிருந்தது. வீடு முழுக்கப் பாத்திர பண்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. சூரிய வெளிச்சம் கூட முழுமையாக அந்த வீட்டுற்குள் வர வாய்ப்பில்லை. மழை கொஞ்சம் வெளுத்து வாங்கினால் வீடு முழுக்கத் தண்ணீர் மயமாகிவிடும். அப்படிப்பட்ட வீட்டிற்குள்தான் இந்தப் பாட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
க்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும் திருவல்லிக்கேணி ஏரியாவிற்குள் நுழைந்தோம். எங்கே பார்த்தாலும் பெண்கள் காலி குடங்களுடன் வரிசையில் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவில் வயதான பாட்டி ஒருவரும் அமர்ந்துகொண்டு அனைவரையும் வரிசையில் நிற்கும்படி கண்டித்துக்கொண்டிருந்தார். கம்பீரமான குரல், வளைந்து நெளிந்து கிடக்கும் கால் நரம்புகள், நீளமான கூந்தல் என முதுமையின் அழகோடு இருந்த அவரிடம் பேசாமல் நகர மனமில்லை. பேச ஆரம்பித்ததும் அவருடைய வீட்டிற்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

``எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த சமயம் குடிசைப் பகுதியில் இருந்த மக்களுக்குச் சொந்தமாக வீடு கட்டிக் கொடுப்பதாகச் சொன்னாரு. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் அதிகாரிகள், எங்க ஒவ்வொருவருக்கும் வீட்டின் அளவை எட்டுக்கு ஆறரையாக அளந்து கொடுத்துட்டுப் போயிட்டாங்கோ... இந்த ஏரியா முழுசும் எம்.ஜி.ஆர் கட்டிக் கொடுத்த வீடுகள்தான்! ஒவ்வொருவரும் வசதி வர, வர அந்த வீட்டை புதுப்பிச்சுக் கட்டிட்டாங்கோ. எனக்கு வசதி இல்லைங்குறதுனால அப்படியே விட்டுட்டேன்மா'' எனத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
ஒருவர் மட்டுமே படுக்கும் அளவிலான வீடு. வீட்டின் மேற்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டிருந்தது. வீடு முழுக்கப் பாத்திர பண்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. சூரிய வெளிச்சம் கூட முழுமையாக அந்த வீட்டுற்குள் வர வாய்ப்பில்லை. மழை கொஞ்சம் வெளுத்து வாங்கினால் வீடு முழுக்கத் தண்ணீர் மயமாகிவிடும். அப்படிப்பட்ட வீட்டிற்குள்தான் இந்தப் பாட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் கால் நீட்டிப் படுக்கும் அளவிற்கு மட்டுமே அந்த வீட்டுக்குள் இடம் இருந்தது. அந்த வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு அவருடைய கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
``என் பேரு குள்ளம்மா. எனக்கு 85 வயசாகுது. எனக்கு மூணு புள்ளைங்கோ... அதுல ஒரு பொண்ணு சின்ன வயசுலேயே செத்துப் போச்சு. இன்னொரு பையனும் செத்துப் போயிட்டான். ஒரே ஒரு பொண்ணு மட்டும் இருக்கு. அந்தப் பொண்ணு அதோட புள்ளைங்க வூட்டுல இருக்கு... ஏதாச்சும் நல்லது, கெட்டதுன்னா பேசிப்பேன்.
குள்ளம்மாள் பாட்டி
முப்பது வருஷத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் கொடுத்த இந்த வூடுதான் எனக்கான சொத்து. எம்.ஜி.ஆர் செத்துப் போய்ட்டாருன்னு அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி சின்ன அளவுக்கு இடத்தைக் கொடுத்துட்டாங்க. வெறும் இடத்துல இரண்டு குச்சியை நட்டு வைச்சி இதுதான் உங்க இடம்னு காட்டினாங்க. அந்த இடத்தை இந்த அளவுக்கு மட்டும்தான் என்னால சரிசெய்ய முடிஞ்சது. எம்.ஜி.ஆர் இருந்திருந்தார்னா எங்களுக்கு இந்த நிலைமையே வந்துருக்காது. அவரே நல்ல வீடா கட்டிக் கொடுத்திருப்பாரு.
இடம் கொடுத்தவங்க ஏரியாவுக்கு கரன்ட் கொடுக்கலை. பத்து வருஷத்துக்கு முன்னாடிதான் கரன்ட் கிடைச்சது. அதுவும் ஒவ்வொரு கட்சியையும் பார்த்து தொடர்ந்து கேட்டுக் கேட்டு வாங்கினோம். எங்க ஏரியாவுக்கு முன்னாடி ஒரு கோயில் இருக்கு. நாங்க இருக்கிற இந்த மண் கோயிலுக்குச் சொந்தமானது. அதனால கோயில்ல உள்ள அதிகாரிங்க வரி வேணும்னு கேட்டாங்க. நாங்களும் கொடுக்க சம்மதிச்சோம். எனக்கு 80 ரூபாய் வரி கேட்டாங்க. சரி கொடுக்குறேன்னு சொன்னேம்மா... இப்போ அந்த வரியைக் கூட்டி அதிகமா கேட்குறாங்க.
குள்ளம்மாள் பாட்டி
அரசாங்கத்திலிருந்து கொடுக்கிற 1000 ரூபாயை வெச்சுதான் என் தேவையை நிறைவேற்றிக்கிறேன். இங்க யாருக்கும் கக்கூஸ் வசதி கிடையாது. பொது கக்கூஸூக்குதான் போகணும். எப்படியோம்மா எங்க காலம் கழியுது. இது எம்.ஜி.ஆர் கொடுத்த வூடுங்குறதுக்கு எந்த ஆதாரமும் என்கிட்ட இல்லை. வெள்ளம் வந்து வூடு முழுக்க அடிச்சிட்டுப் போயிடுச்சு. அதுல இருந்த அத்தாட்சியும் போயிடுச்சு.
ஆனா, இது அவரு கொடுத்த வூடுதான். இதை யாருக்கும் விற்க மாட்டேன். நான் செத்தா கூட இந்த வூட்டுக்குள்ளேயேதான் சாவேன். என் பிணத்தைக்கூட அது உள்ளே இருந்துதான் எடுக்கணும்'' என்றார் அழுத்தமாக

கருத்துகள் இல்லை: