
அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் நேற்று (மே 12) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று கூறியிருந்தார். கமலின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. ராம்தாஸ் அத்வாலே, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது பாஜக தரப்பில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரச்சாரத்துக்குக் குறைந்தது 5 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும். கமல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே சமயத்தில் கமல்ஹாசன் கூறியது சரியானதுதான் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரியும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி மட்டுமல்ல அவர்கள். ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்துமகா சபா இவர்கள் எல்லோருமே மாற்றுக் கருத்து உடையவர்களை அழிக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை உடையவர்கள். இஸ்லாம் மதத்தில் எப்படி ஐஎஸ் இருக்கிறதோ, அதுபோல அதற்கு இணையாக இந்து மதத்தில் இருக்கிற அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எனவே கமல் சொன்னதை நான் 1000 விழுக்காடு ஆதரிக்கிறேன்” என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், “கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்தவர். அதுமட்டுமல்ல இப்போது மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடக்கூடிய சாத்வி பிரக்யா தாகூர் என்பவர் ஜாமீனில் வெளிவந்தவர். எனவே முதல் தீவிரவாதி, கடைசி தீவிரவாதி என்று சொல்வதற்கில்லை. முதலும் அவர்கள்தான், கடைசியும் அவர்கள்தான் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பத்துப் பேரை வைத்திருக்கிறார்கள். அதைத்தான் கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார்” என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக