புதன், 15 மே, 2019

ஊடகங்கள் மோடிக்கு ஒதுக்கியது 700 மணித்தியாலங்கள் .. அமித் ஷாவுக்கு 200. ராகுலுக்கு 150 பிரியங்காவுக்கு 80 ..

Subaguna Rajan : இந்த தேர்தல் களத்தில் இந்திய ஊடகங்களின் ‘நடுநிலை ‘ மிக அருமையாக நிலைநாட்டப்பட்டது ஊரறிந்த சங்கதி .காட்சி/செய்தி
ஊடகங்கள் ஒவ்வொரு தலைவர்களின் பரப்புரைகளுக்கு ஒதுக்கிய ‘காட்சி நேரம் ‘ பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது .
இதில் யார் முதலிடம் பிடித்திருப்பார்கள் என்பதில் யாருக்கும், எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆம், அவரேதான். அபிநயசுந்தரன் , குரலோசை கோகிலன் நரேந்திர மோடியேதான். எவ்வளவு நேரம். கொஞ்சம் உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். சுமார் 700 க்கும் மேலான மணிநேரங்கள். அதற்கடுத்த இடத்தில் அமித் பாய் . அவரது ஸ்கோர் சுமார் 200மணிநேரம். ராகுலுக்கு சுமார் 150 மணிநேரம் . பிரியங்காவிற்கு 80 மணிநேரம் . இந்தக் கணக்கு அனைத்து ஊடகங்களின் ஒளிபரப்பில் இவர்களது முகம் பிரசன்னமான நேரம்.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது, மோடி நம்மை துர்கனவென நம்மை துரத்தியிருக்கிறார். உங்கள் தொலைக்காட்சி ரிமோட்டில் எந்த சேனலை தேர்ந்திருந்தீர்களென்றாலும் , அங்கே இரு கையையும் உயர்த்தியபடி, மாற்றி மாற்றி கையோடு கை அடித்தபடி, ஒன்றொடு ஒன்று இணைத்தபடி அபிநயித்துக் கொண்டிருந்திருப்பார் மோடி எனும் 56” சௌகிதார். அவரது ‘கதைகளுக்கு’ தப்பியிருக்க முடியாது. ( அந்த வகையில் ‘இந்தி படிக்காமல் வீழ்ந்து போன’ தமிழர்கள் பாக்கியவான்கள் . ஏனெனில் அவரது ராகதாளம் புரியாது )
மோடியின் சாதனை ( வேதனை) இந்த வகையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. ஆனால் இந்த இலவச விளம்பர சேவையை ( பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் ‘லைவ் ‘ ) வழங்கியது கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் . அவர்கள் ஏன் , எதற்காக இதைச் செய்ய வேண்டும். இதற்கான சன்மானம் என்ன ? யாருக்கு? முதலாளிகளுக்கா அல்லது கூவிக் கொந்தளித்த ஊடகவியாதிகளுக்கா?
இந்தச் சலுகை அவர் பிரதமர் என்பதால் என்று தப்ப முடியாது . ஏனெனில் அது அமித் ஷாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு சன்மானம் இல்லையென்றால் ‘ இலவச காட்சி நேரத்தை ‘ எந்தக் கணக்கில் எழுதுவது. ஆம் , அதேதான் . பாஜக விற்கான ரகசிய தேர்தல் நிதியுதவி. இதை உறுதிப்படுத்தியது பாஜக கட்சி , காங்கிரஸ் அளவிற்குக் கூட தேர்தல் விளம்பரங்களை வெளியிடவில்லை .காரணம் ஒன்று இலவச பரப்புரை விளம்பரம். இரண்டாவது சொல்லிக் கொள்ளும்படியான எந்தவித திட்டங்களோ / சாதனைகளோ இல்லவே இல்லை . அவர்கள் விளம்பரம் செய்ய விரும்பிய புல்வாமா, பாலகோட் , பாதுகாப்பு , சர்ஜிகல் ஸ்டிரைக் போன்றவற்றை பாழாய்ப் போன தேர்தல் விதிமுறை தடுத்து விட்டது . இன்னொன்று அவற்றை காட்ட அசலான தடயங்களும் இல்லை . அதனால்தான் , மேகமூட்டம் , ரடார் டெக்னிக் போன்ற கதைகளால் வாயிலேயே வடை சுட்டது .
எது எப்படியோ இந்திய அரசின் அனைத்து தன்னாட்சி அமைப்புகளும் பயந்து கூனிக் குறுகி தென்டனிட , ஊடகங்கள் உச்சஸ்த்தாயியில் ‘ ஜால்ரா’ போட சுபமாக நடந்தேறியுள்ளது தேர்தல் திருவிழா.
ஆனால் , மக்கள் எனும் அசலான அதிகாரிகளின் கைவிரல் நுனி அசைவு , இந்த முதலாளிகள் , அதிகாரிகள், ஊடக கூலிகள் கூட்டணியை வீழ்த்தப் போகும் நாள் 23.05.2019 . அன்று இந்த ஊடக வியாதிகளின் ‘ அந்தர் பல்டிதான் ‘ ஹைலைட்டாக இருக்கும் . வேடிக்கை பார்க்க தயாராவோம்.
நன்றி: Subaguna Rajan

கருத்துகள் இல்லை: