


மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் சுற்று பயணம் மேற்கொள்ள மோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகப் பிரதமர் அலுவலகத்துக்குத் தேர்தல் ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தராகண்ட் மாநிலம் ஜோலிகிராண்ட் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் வந்து சேர்ந்தார். கேதார்நாத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு பாஹரி எனப்படும் பாரம்பரிய உடையில் சென்று வழிபட்ட பிரதமர் பின்னர் அப்பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார்.

மோடியின் தியானம் தொடர்பான புகைப்படங்களை பாஜகவினர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிரமிக்கத்தக்க மலைகள் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் தானும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
குளிர்காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கேதார்நாத் கோயில் நடை அண்மையில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக