செவ்வாய், 14 மே, 2019

‘லாலு இல்லாத இந்தத் தேர்தல் களம், ஹெலன் இல்லாத பாலிவுட்!’


நாடு தழுவிய தேர்தல் என்றால், லாலு என்ன பேசுகிறார் என்று கவனிப்பது பிஹாரைத் தாண்டியும் அரசியல் ஆர்வலர்களால் தவிர்க்க முடியாதது. ஐம்பதாண்டுகளில் லாலுவின் நவரசப் பிரச்சாரம் சேராமல் எந்தத் தேர்தல் முழுமை பெற்றிருக்கிறது? சிறையில் லாலு அடைப்பட்டிருக்கும் நிலையில், அவர் இல்லாத பிரச்சாரக் களம் இத்தேர்தலில் ஒரு குறைதான். என்னைப் போன்ற அந்தக் கால வட இந்திய ஆசாமி ஒருவர் சரியாகத்தான் வர்ணித்திருக்கிறார், ‘லாலு இல்லாத தேர்தல் களம், ஹெலன் இல்லாத பாலிவுட்!’
ஹெலனைவிடச் சிறந்த நடனமணிகள் நம்மிடையே இல்லையா என்ற கேள்வி அர்த்தமற்றது. ஹெலன் என்றால், நடனம் மட்டும் அல்ல; ஹெலனைப் பார்த்தாலே பரவசம்; லாலுவும் அப்படித்தான். எளிமையான தோற்றம். பார்த்தவுடனேயே சிரிக்கத்தோன்றும் நட்பான முகம். உருண்டையான தலை, குறும்பான விழிகள், கண்ணில் இருப்பதைவிட மார்பில் தொங்கும் நேரமே அதிகமான அவருடைய கோழிமுட்டைக் கண்ணாடி, வெண்ணிற பைஜாமா – ஜிப்பா, உப்பி ஊதிய வாய், உள்ளே ஒரு லிட்டர் வெற்றிலைச் சாறு, காதுகளை ஒட்டி ஆன்டெனாக்களைப் போல பக்கவாட்டில் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் நாலைந்து முடிகள், லேசான தொந்தி, பொல்லென நரைத்த தலை… லாலுவைப் பார்ப்பதே பரவசம்தான்.
*புயலாய்ச் சுழன்றடிக்கும் பேச்சு*

லாலுவின் பிரச்சாரத்தை இந்தி தெரிந்தவர்கள்தான் ரசிக்க முடியும் என்ற தேவை இல்லாதது அவருடைய மகா சிறப்பு. எவருமே சிரிக்கும்படியான எளிதான கிண்டல், காலை வாரும்போது கச்சிதமான வார்த்தைகள், சவால் விடும்போது சதிராடும் சொல்லாடல், எச்சரிக்கும்போது எம்டன் அளவுக்கு வெளிப்படும் உஷ்ணம். தென்றலாய், தீயாய், புயலாய்ச் சுழன்றடிக்கும் பேச்சல்லவோ அது!
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் அடுத்தடுத்து தண்டனை விதிக்கப்பட்டு ஜார்க்கண்டில் சிறைவாசம் போன பிறகும், லாலுவின் செல்வாக்கு ஒன்றும் மக்களிடம் குறையவில்லை. “லாலு சிறையில் இருக்கிறார்; பிரச்சாரத்துக்கு அவர் வரவில்லை என்றாலும், அவரைப் பற்றிய கதைகளே மக்களிடம் மகா கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்கின்றன” என்று சொல்கிறார்கள் அவருடைய கட்சியினர்.
ஆனால், களத்தில் லாலு இல்லாமல்போனது அவர்களுக்குப் பெரிய இழப்புதான். மகா கூட்டணியில் எல்லோரையும் ஈர்க்கவல்ல பெரிய நட்சத்திரம் அவர்தான். ஒரு செய்தியை எல்லோருக்கும் பரவச் செய்வதில் தன்னிகரற்றவர். பிரச்சாரத்தில் லாலு ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாளைக்கு ஏழெட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்வார். அவரோடு ஒப்பிட தேஜஸ்வியால் நான்கைந்து கூட்டங்களுக்கு மேல் கலந்துகொள்ள முடிவதில்லை. மேலும், லாலு மாதிரி அவர்களால் மக்கள் மத்தியில் கதைகளை உருவாக்க முடியவில்லை.
லாலு வார்த்தைகளால் மட்டும் கதைகளை உருவாக்குபவர் அல்ல. உணர்வுகள் ததும்பும் உறவாலும் கதைகளை உருவாக்குபவர். ‘கோபால்கஞ்ச் டு ரெய்சினா’ என்ற லாலுவின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய நளின் வர்மா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கதையை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
*கால் கிலோ ஆட்டு ஈரலுடன் வாருங்கள்*
“லாலுவின் புத்தகத்தைப் பதிப்பிக்கும் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. அவருடன் ஆலோசனை கலக்க மும்பைக்கு விமானத்தில் சென்றேன். இதயச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ‘ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்’ மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றேன்.
ஆட்டோ டிரைவர் முஸ்லிம். எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார். மருத்துவமனையின் பெயரைச் சொன்னேன். ‘அங்குதான் லாலு பிரசாத் சிகிச்சை பெறுகிறார், அவரைத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘அவரைப் பார்க்கத்தான் போகிறேன்’ என்றதும் ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து சாலையோரமாக நிறுத்தினார். ‘நான் கிழக்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பெயர் அன்சாரி. அவரை நான் சந்திக்க உதவ முடியுமா? உங்களுக்காகப் பிரார்த்திப்பேன்’ என்றார்.
எனக்கு வியப்பாக இருந்தது. அவர் கேட்கிறபடி லாலுவைச் சந்திக்க என்னால் ஏற்பாடு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவர் பெயரையும் செல்போன் எண்ணையும் சின்ன தாளில் எழுதி சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன். ‘அமிதாப் - லாலு இருவரில் ஒருவரைத்தான் சந்திக்க முடியும் என்றால், லாலுவையே நான் சந்திப்பேன்’ என்றார் அவர்.
மருத்துவமனைக்குள் லாலு அறைக்குச் சென்றேன். புத்தகத்தில் எது எப்படி எழுதப்பட வேண்டும் என்று கேட்டு உறுதிபடுத்திக்கொண்டோம். நான் புறப்படும் நேரம் வந்தது. அன்சாரி நினைவுக்கு வந்தார். லாலுவிடம் சொன்னேன். அப்போது பிஹாரிலிருந்தும் மகாராஷ்டிரத்திலிருந்தும் அவரது கட்சி நிர்வாகிகள் அவரைப் பார்க்க வெளியில் காத்திருந்தனர். நான் இந்தத் தகவலைச் சொன்னதும் லாலு, ‘அவருடைய செல்போன் எண் இருக்கிறதா?’ என்றார். கொடுத்தவுடன், அவருடன் இருந்த பிஹார் சட்டமன்ற உறுப்பினர் போலா யாதவைக் கூப்பிட்டு, ‘அன்சாரியைக் கூப்பிடு, போனை என்னிடம் கொடு’ என்றார்.
அன்சாரியிடம் பேசிய லாலு, ‘என்னைப் பார்க்க உடனே வாருங்கள். இன்றைக்கு பக்ரீத் அல்லவா? வரும்போது கால் கிலோ ஆட்டு ஈரலுடன் வாருங்கள்’ என்றார். பரவசத்தின் உச்ச நிலைக்கே சென்ற அன்சாரி வெகு விரைவாக மருத்துவமனைக்கு வந்தார். லாலுவை நேரில் பார்த்ததும் தேம்பித்தேம்பி அழுதார். லாலுவின் கண்களிலும் கண்ணீர் திரண்டது. அன்சாரியின் தோளைத் தட்டினார். ‘அழாதே, லட்சுமணனுடன் போ, கடுகெண்ணெய் பூண்டு பச்சை மிளகாய் மிளகு உப்பு போட்டு ஈரலைச் சமைத்துக் கொண்டுவா, நாம் ஒரே தட்டில் சாப்பிடுவோம்’ என்றார்.
*லாலு என்றால் பரவசம்*
சமைத்து வந்தபோது லாலு ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு, ‘வா சாப்பிடலாம்’ என்றார். ‘நான் ஒரு சாதாரண ஓட்டுநர், நீங்களோ பெரிய தலைவர்’ என்று தயங்கிய அன்சாரியிடம், ‘போதுமப்பா உன் மரியாதை… சாப்பிடு, இல்லாவிட்டால் முதுகில் இரண்டு போடுவேன்’ என்று சொல்லி ஒரே தட்டில் அவருடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்புறம் சொன்னார், ‘அன்சாரி, மகிழ்ச்சி.. போய்விட்டுவா; உனக்கு ஏதாவது உதவி தேவையென்றால், பிரச்சினை என்றால் என்னிடம் வா!’ அன்சாரி, உரத்துச் சத்தமிடும் வகையில் ‘கடவுளே லாலுஜியைக் காப்பாற்று’ என்று சொல்லி கண்ணீர் பெருக லாலுவின் கைகளைத் தொட்டு விடைபெற்றார்.”
இதுதான் லாலு. பிரச்சாரங்களில் செல்கையில் பல நூற்றுக்கணக்கான மக்களுடன் அவர் உறவாடுவார். மிகச் சாதாரண டீக்கடைகளில் முண்டாசு கட்டிக்கொண்டு டீ குடிப்பார்; வயல்களில் இறங்கி விவசாயிகளோடு கலந்துரையாடுவார், தெருக்களில் வளையவரும் மாடுகளைத் தட்டிக்கொடுத்து அவற்றோடு புகைப்படம் எடுத்துக்கொள்வார், பிரச்சாரம் அலுப்பூட்டும்போது பாட்டு பாடி உற்சாகப்படுத்துவார்… லாலு என்றால், சுவாரஸ்யம், லாலு என்றால் பரவசம். உண்மைதான் ஐயா, ‘லாலு இல்லாத இந்தத் தேர்தல் களம், ஹெலன் இல்லாத பாலிவுட்!’
- வ.ரங்காசாரி
நன்றி - இந்து தமிழ் நாளிதழ்

கருத்துகள் இல்லை: