வியாழன், 16 மே, 2019

அண்ணலின் "சாதியை அழித்தொழித்தல்" நூல் வெளியான நாள் இன்று "15th May 1936.

Shalin Maria Lawrence : அண்ணலின் மிக முக்கியமான "சாதியை அழித்தொழித்தல்" நூல் பதியப்பட்டு வெளியான நாள் இன்று "15th May 1936. முதல் பிரதியின் விலை எட்டனா.
இந்த புத்தகம் ஏன் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதற்கு பின்னால் அந்த புத்தகம் வெளியான சூழ்நிலையும் அதற்கு பின் இருந்த வரலாறும் நாம் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
1936ம் ஆண்டு ஜாட்-பட்-தோடக் மண்டல் என்கிற ஹிந்து மத சீர்திருத்தவாத அமைப்பு லாகூரில் நடத்தயிருந்த தங்களின் ஆண்டு விழா மாநாட்டில் அம்பேத்கரை தலைமை தாங்கி உரைநிகழ்த்த அழைக்கிறது. பெயரில் மட்டுமே சீர்திருத்தத்தை வைத்திருந்த அந்த அமைப்பில் சாதி வெறியும், மூட நம்பிக்கைகளும் வேரூன்றி இருந்தது. அந்த அமைப்பில் அதுவரை ஒரு தலித் கூட இடம்பெறவில்லை. அவர்கள் அழைத்த முதல் தலித் அம்பேத்கர்தான் .
விழாவிற்கு முன்னால் அம்பேத்கரின் உரையை எழுத்து வடிவமாக அவரிடம் கேட்டுவாங்கிய அதன் தலைவர்கள் அந்த உரையை படித்து அதிர்ந்துபோனார்கள். உரையில் சாதி ஒழிப்பும், மதவாத எதிர்ப்பும், எழுச்சியும் நிறைந்திருந்தது .வேதங்களையும் புராணங்களையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்திருந்தார் அம்பேத்கர் அவர்கள் அந்த உரையில்.
உரையின் பிரதியை படித்து பார்த்த தலைவர்கள் அவற்றில் பல இடங்களில் மாற்றம் செய்து அம்பேத்கரை பேச நிர்பந்திக்கிறார்கள்.
ஆனால் அம்பேத்கரோ ஒரு புள்ளியை நீக்கினால் கூட நான் அந்த உரையை நிகழ்த்தமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட, வேறு வழி இல்லாமல் அம்பேத்கரை வரவிடாமல் செய்வதற்கு அந்த மாநாடே ரத்து செய்யப்படுகிறது.
அன்று முடிவு செய்த அம்பேத்கர் அந்த நிகழ்த்தாத உரையை அப்படியே புத்தகமாக தனது சொந்த செலவில் வெளியிடுகிறார். கடன் வாங்கி 1500 பிரதிகள் பதிகிறார்.
ஆங்கிலத்தில் "conviction" என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதாவது கொண்ட கொள்கையிலிருந்து எந்த சூழ்நிலையிலும் விலகாத தன்மை. அதற்கு உதாரணம் என்றால் அது அண்ணல் அம்பேத்கர்தான். வேறு யாராக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் சிறப்புகளை தவறவிடக்கூடாதென்று, அந்த நிலையில் அந்த மாநாட்டில் வேறு ஒரு உரையை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கொண்ட கொள்கை மாறாத ஒரு தலைவராக அம்பேத்கர் இருந்திருக்கிறார் என்பதே தனி சிறப்பு.
மேலும் பேசும் வாய்ப்பை இழந்தாலும் வேறொரு வழியில், தான் சொல்ல வந்த கருத்துக்களை புத்தகமாக்கி, அவர் மறைந்து இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த கருத்தை வரலாற்றில் செதுக்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார் அம்பேத்கர்
இதில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாபெரும் பாடம் இருக்கிறது. உன் நிலையால் உனக்கு ஒரு பாதை அடைக்கப்படும் பொழுது உன் பாதையை நீயே உருவாக்கிக்கொள் என்பதுதான் அது
பிகு:- குறிப்பாக இந்த நேரத்தில் தந்தை பெரியாருக்கு நம் நன்றியை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து அதை ஒவ்வொரு வாரமும் "குடியரசு" பத்திரிகையில் பிரசுரித்து அண்ணலை வெகுஜனங்களுக்கு மத்தியில் கொண்டு சென்ற பெருமை பெரியாரையே சேரும் .
ஷாலின்

கருத்துகள் இல்லை: