வெள்ளி, 17 மே, 2019

மோடியும் அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர் 5 ஆண்டுகளில் முதல் தடவையாக .... வீடியோ

.vikatan.com- -malaiarasu : மிகப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையின் கடைசிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதேநேரம் மற்றொருபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரஸ் மீட் நடத்தினார். முதலில் பேசிய அமித் ஷா, ``இந்த மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவில் பா.ஜ.க பிரசாரம் செய்துள்ளது. சுதந்திரத்துக்கு பிந்தைய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இதுதான் முக்கியமானது. கடந்த ஐந்து ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உணர்கிறார்கள்.

ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. 133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. அரசின் திட்டங்கள் மூலம் 50 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். எங்கள் கூட்டணி ஆட்சியில் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு இல்லை. எங்களின் சமுதாயத்தின் அனைத்து படிநிலையிலும் உள்ள மக்களுக்கு உதவியாக அமைந்துள்ளது.
தனிப்பெரும்பான்மை கிடைத்தும் நாங்கள் கூட்டணி ஆட்சியே நடத்தினோம். பா.ஜ.க ஆட்சியில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. அரசைச் சுமுகமாக நடத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினோம். அதுவே எங்களது இலக்காக இருந்தது. 5 ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு இன்று கடைசி நாள், சிறப்பாகப் பணியாற்றினோம் என்ற மகிழ்ச்சி உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற மோடி தலைமையின் கீழ் கடின உழைப்பைக் கொடுத்தோம். இதனால் மிகப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற அலை நாடு முழுவதும் வீசுகிறது" என்று கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட செய்தியாளர்களைச் சந்திப்பில் கலந்துகொள்ளாத பிரதமர் மோடி, ஆட்சியின் கடைசி நாளில் கலந்துகொண்டார். அதுவும் கடைசி 10 நிமிடம் முன்னர்தான் பேச ஆரம்பித்தார். ``தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைவது மகிழ்ச்சி அளிக்கிறது; இனி நான் கொஞ்சம் சற்று இளைப்பாறலாம். இது ஜனநாயகத்தைக் கொண்டாட வேண்டிய தருணம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. பண்டிகை மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்போல தேர்தலும் திருவிழாவைப்போல நடக்கிறது. கடந்த பொதுத்தேர்தலைவிட இந்த முறை அதிக பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருந்தனர். நாட்டின் பல இடங்களுக்கு பிரசாரம் செய்ய சென்றதில் ஆட்சி நடத்த வாய்ப்பளித்தற்கு நன்றி சொல்ல நேர்ந்தது.
நாங்கள் கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன்.  அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் நாட்டு மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். கடந்த ஐந்து வருடம் என்னை உங்களுக்கு பணிபுரிய வைத்ததற்காக நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அதேநேரம் ஐந்து ஆண்டு சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். சர்வதேச நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த இந்தியாவால் முடிந்தது. ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற உண்மையை முன்னிலைப்படுத்துவது தான் எங்களது கடமை. நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது.
கடந்த 2 தேர்தல்களின் போது ஐபிஎல் தொடர்கள் இங்கு நடைபெறாமல் வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டன. தற்போது வலிமையான அரசால் ஐபிஎல், ரமலான், பள்ளி தேர்வுகள் உள்ளிட்டவை அமைதியாக நடந்தன.  ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்; பா.ஜ.க-வுக்கு இந்த வருட மக்களவைத் தேர்தலில் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என நம்புகிறேன். இரண்டாவது முறையாக தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். வரலாறு எங்களுடையதாக இருக்கும்" என்றார்

கருத்துகள் இல்லை: