ஞாயிறு, 19 மே, 2019

வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?

மின்னம்பலம் : 2019 மக்களவைத் தேர்தலுக்கான
வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?
இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்து மாநிலங்களிலும், ஒன்றியப் பிரதேசங்களிலும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 287 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 128 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 127 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. டைம்ஸ் நவ் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 306 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 142 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 94 தொகுதிகளும் கிடைக்கும் என்று முடிவுகள் வந்துள்ளன.
282-290 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 124 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், இதர கட்சிகள் 113 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று நியூஸ் நேஷன் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

டெல்லியில் பாஜக ஏழு தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி 10-12 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 13-14 தொகுதிகளிலும் பாஜக 0-1 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக 26-28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1-3 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று ஆஜ் டாக் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கர்நாடகத்தில் பாஜக அதிகளவிலான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று இரண்டு பிராந்திய ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. பாஜக 18-20 தொகுதிகளிலும், கங்கிரஸ் கூட்டணி 7-10 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று சுவர்னா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று டிவி9 கன்னடா நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

கருத்துகள் இல்லை: