வெள்ளி, 24 மே, 2019

தென் சென்னையை தட்டி பறித்த தமிழச்சி தங்கபாண்டியன் .. எல்லா தரப்பையும் எப்படி வென்றார்?


எப்படி வென்றார் தமிழச்சி தங்கபாண்டியன்?!’ – தென்சென்னையை ஆச்சர்யப்படுத்திய 4 விஷயங்கள்"
– தென்சென்னையை ஆச்சர்யப்படுத்திய 4 விஷயங்கள் ஆ.விஜயானந்த் - விகடன் :
தோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.< தென்சென்னை தொகுதியில் மூன்றாவது முறையாக இலை துளிர்ப்பதைத் தடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை எதிர்த்து 2,62,212 வாக்குகள் வித்தியாசத்தில் சூரியனை மலரச் செய்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர், ஆங்கிலப் பேராசிரியை எனப் பல பிளஸ்கள் இருந்தாலும், தேர்தல் களத்தைத் தமிழச்சி எதிர்கொண்ட விதத்தை ஆச்சர்யத்தோடு விவரிக்கின்றனர் தென்சென்னை தொகுதி உடன்பிறப்புகள்.
1. படித்தவர்கள் நிரம்பி இருக்கும் தொகுதியாகப் பார்க்கப்படும் தென்சென்னையில் கற்றவர்கள் மத்தியில் படித்த வேட்பாளராகப் பிரசாரம் செய்தார். அடித்தட்டு மக்களிடம், `நான் இன்னும் கிராமத்து சுமதிதான்’ என்ற அணுகுமுறை பெரிதும் கைகொடுத்தது. எந்த வேட்பாளரும் செய்ய முடியாத அளவுக்கு நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டார். தோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது.
அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை. தி.மு.க-வுக்குள் பல கோஷ்டிகள் இருந்தாலும், `தமிழச்சியை வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்பதில் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டனர். அதற்கு உதாரணமாக, கே.கே.நகர், தி.நகர், மைலாப்பூர் ஆகிய தொகுதிகளைப் பார்க்கலாம். தி.நகரில் ஏராளமான பிரச்னைகள் இருந்தன. கே.கே.நகரில் பகுதிக் கழகச் செயலாளர் தனசேகரனுக்காக ஓட்டு போடாதவர்களே அதிகம் உள்ளனர். அவர் நிற்கும்போதெல்லாம் குறைவான வாக்குகளில் தோற்றார். இந்த அதிருப்திகளைச் சரிப்படுத்துவதற்காகவே கட்சி சாராத நபர்கள் கொண்ட டீம் ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் மூலமாக அதிருப்திகளைச் சரிசெய்யும் வேலைகள் நடந்தன.

2. தி.மு.க மீது அதிருப்தியில் உள்ள சில சமூக மக்களை சமாதானப்படுத்துவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு வாக்குறுதிகளைக் கொடுக்கும் வேலைகள் நடந்தன. அவர்களிடம் பேசும் குழுவினர், `தமிழச்சி வெற்றி பெற்றால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் வந்து சேரும். இதுவரையில் இருந்த எம்.பி தெருப்பக்கம்கூட வரவில்லை. நாங்கள் இந்தத் தொகுதியிலேயே எம்.பி அலுவலகம் திறப்போம். நீங்கள் நேரடியாக வந்து குறைகளைச் சொல்லலாம்’ என நம்பிக்கை கொடுத்தனர். குறிப்பாக, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தி.க தலைவர் வீரமணி மீது கடும் கோபத்தில் இருந்தனர். அந்த மக்களை சமாதானப்படுத்தியதன் விளைவாக, வாக்கு எண்ணிக்கையின்போதே 13,000 வாக்குகள் கூடுதலாக வந்து சேர்ந்தன. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தி.நகரில் தி.மு.க அதிக வாக்குகளை வாங்கியதும் இந்தத் தேர்தலில்தான். தி.மு.க என்பதைத் தாண்டி எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியை ஆகியவற்றை முக்கியமாகப் பார்த்தனர். மைலாப்பூரை எங்களுக்குப் பலவீனமான பகுதியாகப் பார்த்தோம். ஆனால், வேட்பாளரின் அணுகுமுறையால் 33,000 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுவிட்டோம்.
தமிழச்சி
3. சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் தி.மு.க-வின் கோட்டையாக இருக்கின்றன. `நாம் யாரிடம் சென்றாலும் வேலை நடக்காது. தமிழச்சி எம்.பி-யாக வந்துவிட்டால் எதையாவது செய்வார்’ என்ற நம்பிக்கையை அடித்தட்டுத் தொண்டர்களிடம் ஏற்படுத்தினோம். அதிருப்தி காரணமாக ஒதுங்கியிருந்த தி.மு.க-வினரும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதற்கும் வேட்பாளர் தரப்பில் தயக்கம் காட்டவில்லை. அனைத்துச் சவால்களையும் புன்னகையோடு எதிர்கொண்டார் வேட்பாளர் தமிழச்சி.

தமிழச்சி
4. காலை 7 மணிக்குப் பிரசாரம் என்றால் 6.45 மணிக்கே தொகுதிக்கு வந்துவிடுவார். `வெயில் அதிகமாக இருக்கிறது. 10 மணிக்குப் பிரசாரத்தை முடித்துக்கொள்ளலாம்’ என்றாலும், 1 மணி வரையில் மக்களைத் தொடர்ந்து சந்திப்பதற்கும் அவர் தயக்கம் காட்டவில்லை. மாலை 5 மணிக்கு வாகனத்தில் ஏறினால் 10 மணி வரையில் ஓய்வில்லாமல் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்தார். நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் மிகத் தெளிவாக இருந்தார். காரில் கொடி கட்டாமல் செல்வது, சிக்னல்களை மதிப்பது என ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்ததும் பிளஸ்ஸாக மாறியது. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் வியூகமும் மா.சுப்ரமணியனின் களப் பணியும் 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் கொண்டு வந்து சேர்த்தன. கூடவே, வேட்பாளரின் அணுகுமுறை கட்சிக்காரர்களை மட்டும் அல்ல, வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் பிரதான காரணமாக அமைந்தது” என ஆச்சர்யத்தோடு கூறி முடித்தனர் தென்சென்னை தி.மு.க-வினர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: