செவ்வாய், 21 மே, 2019

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு- தேர்தல் ஆணையத்திடம் 21 எதிர்க்கட்சிகள் மனு

மாலைமலர் :வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாக கூறி 21 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளன. புதுடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். எனினும் மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மீண்டும் தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.


இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுகளுக்கும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தால்கூட, அந்த தொகுதியில் முழுமையாக ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது

கருத்துகள் இல்லை: