செவ்வாய், 21 மே, 2019

சசிகலாவை சந்தித்த இபிஎஸ் -ஓபிஎஸ் மனைவிகள்..சசிகலா சமாதானம் ஆகவில்லையாம்

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி“மக்களவைத் தேர்தல் முடிவுகள், 22 தொகுதிகளுக்கான மினி மின்னம்பலம் ; சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இரண்டும் 23 ஆம் தேதி வெளிவர இருக்கும் நிலையில் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியை தக்க வைப்பாரா இல்லையா என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலை விட மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே எடப்பாடி அதிக கவனம் செலுத்திவந்தார். 22 தொகுதிகளில் எப்படியாவது தனது ஆட்சி நிலைக்கும் அளவுக்கான எம்.எல்.ஏ. சீட்டுகளைப் பெற்றுவிடுவது என்பதில் தீவிர முயற்சியெடுத்தார் எடப்பாடி. ஆனபோதும் அவருக்கு கிடைத்த உளவுத்துறை உள்ளிட்ட ரகசிய தகவல்கள் அவருக்குத் திருப்தி அளிக்கும்படி இல்லை.
இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகளால் தனது ஆட்சிக்கு ஆபத்து நேரிட நேர்ந்தால் என்ன செய்வது என்று யோசித்து சிறையில் இருக்கும் சசிகலாவுக்கே தனது நம்பிக்கைக்குரிய சிலரை தூது விட்டிருப்பதாக முதன் முதலில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் தகவல் வெளியிட்டோம். மே 9 ஆம் தேதி வெளியான டிஜிட்டல் திண்ணையில், சசிகலாவுக்கு எடப்பாடி அனுப்பிய சமரச தூதர் யார்? என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், ‘எடப்பாடி பழனிசாமியின் மனைவியும் இளவரசியின் குடும்பத்தோடு நெருங்கி பழகி வருபவர். இந்த அடிப்படையில் ஏதேனும் நடக்க வாய்ப்பிருக்கிறது என அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்’ என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதுதான் சில நாட்களுக்கு முன் நடந்தேறியிருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இருவரும் தனித்தனியாக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவல் இப்போது அதிமுக, அமமுக வட்டாரங்களில் ரகசியமாக பேசப்படுகிறது. எடப்பாடி, ஓ.பன்னீர் இருவருமே தங்களுக்குள் ஆலோசித்து தங்களது இல்லத்தரசிகளை சசிகலாவிடம் தூது அனுப்பினார்களா அல்லது ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் இதை செய்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரது மனைவிகளும் சில நாட்களுக்கு முன் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
சசிகலாவை முதலில் சென்று சந்தித்தது ஓ.பன்னீரின் மனைவி விஜயலட்சுமிதான். அவர் சசிகலாவிடம் தன் கணவர் ஏற்கனவே தினகரனை சந்தித்தது பற்றியும் சொல்லிவிட்டு இப்போதைய சூழலில் பன்னீர் சமாதானமாக பேச விரும்புகிறார் என்று சசிகலாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா சிறைக்கு தமிழகத்தின் முக்கிய காவல்துறை அதிகாரிகளோடு சென்று இருமுறை சசிகலாவை சந்தித்திருக்கிறார். ஆனால் இருவரது மனைவிகளும் தன்னை சந்தித்துப் பேசியும் சசிகலா சமாதானம் ஆகவில்லை என்றே சொல்கிறார்கள் அமமுக தரப்பில்.
தேர்தல் முடிந்து திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் தினகரன் ஆதரவோடு ஆட்சி கவிழ்ந்து, திமுக கைக்குப் போய்விடும். பிறகு அதிமுக அமைச்சர்களை ஊழல் வழக்குகள் என்று சிறைக்கு அனுப்புவார்கள் என்ற அச்சத்தில்தான் இருவரும் தூது விட்டிருக்கிறார்கள். ஏற்கனவே துணை முதல்வர் ஒபிஎஸ் தினகரனிடம் சமாதானம் பேசியதை வெளிப்படையாக உடைத்தார் தினகரன். ஏற்கனவே எடப்பாடி அனுப்பிய தூதர்கள் மூலமாக சசிகலா சமாதானம் ஆகாத நிலையில்தான் எடப்பாடி தன் குடும்பத்தில் இருந்து மனைவியையே சசிகலாவிடம் தூது அனுப்பியுள்ளார். இதையும் தினகரன் விரைவில் அம்பலப்படுத்துவார் என்கிறார்கள் அமமுக தரப்பில்” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப். இதை அப்படியே ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: