வெள்ளி, 24 மே, 2019

மொத்தம் தெரிவான 5 கம்யுனிஸ்ட் எம்பிக்களில் 4 பேர் திமுக கூட்டணியில் இருந்து ...

LR Jagadheesan : ஆறாவது முறையாக தமிழ்நாட்டு முதல்வராகும் வரலாற்று சாதனைக்கான வாய்ப்பு வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் (அதுவும் ஏராளமான சட்டவிரோத முறைகேடுகள் மூலம்) தன்னிடம் இருந்து பறிபோக வஞ்சகத்தோடு ஒத்துழைத்த இடதுசாரிகள் குறித்து கலைஞர் வெளியிட்ட கவலைதோய்ந்த வார்த்தைகள் இவை.
சரியாக மூன்றாண்டுகள் கழித்து ஒட்டுமொத்த நாட்டில் இருந்தும் இந்திய நாடாளுமன்றம் செல்லும் மொத்த இடதுசாரி உறுப்பினர்கள் ஐந்து பேரில் நான்குபேரை தம் தோளில் சுமந்து வெற்றி பெற வைத்திருக்கிறது கலைஞரின் கட்சியான திமுக. அதுவும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவைவிட, ஆண்ட மேற்குவங்கத்தைவிட என்றுமே ஆளாத தமிழ்நாட்டில் இருந்து இந்த நான்குபேர் செல்வதற்கு திமுகவின் ஒத்துழைப்பும் உழைப்புமே முதன்மைக்காரணம்.

இதை பார்க்கும்போது பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்கிற வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அது இங்கே பொருந்தாது. ஏனெனில் உண்மையில் கலைஞர் இடதுசாரிகளை என்றுமே பகையாக நினைத்ததே இல்லை. அவர்களோடு அரசியலில் எவ்வளவு சண்டைகள் போட்டாலும் இடதுசாரிகளை அவர் பெரிதும் மதித்தார். காரணம் அவர்களை அவர் தன் நேசசக்திகளாகவே பார்த்தார்.
இன்று அவரது கட்சியும் அதே மரியாதையுடனே இடதுசாரிகளை நடத்தி ஆளுக்கு இரண்டு என நான்கு இடங்களைக்கொடுத்து நான்கிலும் வெல்லவும் வைத்திருக்கிறது.
இனியேனும் இடதுசாரிகள் திமுக மீதான தம் வரலாற்று வன்மத்தை விடுத்து திமுகவையும் திராவிடர் இயக்கத்தையும் கொஞ்சமேனும் மரியாதையுடன் நேச சக்தியாக நடத்துவார்களாக.
ஏனெனில் அடுத்த ஐந்தாண்டுகள் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் சவால் மிகுந்தவையாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உலக பொருளாதார நிலைமை வேறு இந்த சவால்களை மேலும் அதிகரிக்கச்செய்யும். கூர்மைபடுத்தும்.
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தம் வெற்று ஈகோக்களை கட்டிக்கொண்டு அழ இது நேரமல்ல. நெகிழ்வும் நட்புமே நெருக்கடிகளை கடக்க உதவும் குணங்கள். வீம்பும் வெறுப்பும் அல்ல.
வரலாற்றில் இருந்து பாடம் கற்போம் என்று அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளும் இடதுசாரிகள் அந்த பாடத்தை தமிழ்நாட்டில் இருந்து துவங்கலாம். ஏனென்றால் இந்திய இடதுசாரிகள் வரலாறு நெடுகிலும் அதிகபட்ச தவறுகள் செய்தது இங்கே தான்.
அதனால் தான் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டமன்றத்தேர்தலில் ஆட்சிக்கு வெகு அருகில் வந்த ஒரு இயக்கம்/கட்சி இன்று ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெறும் கட்சியாக தேய்ந்து கிடக்கிறது. தேவை சுதபரிசோதனை. திராவிடம் தன் பகையல்ல என்கிற தெளிவு.

கருத்துகள் இல்லை: