ஞாயிறு, 19 மே, 2019

சந்திரபாபு நாயுடு… சந்திரசேகர ராவ்… ஸ்டாலின்… பிரதமர் நாற்காலி கணக்கு!

Priyanka Gandhi : An ExitPoll from the feedback of on-ground report given by Volunteers of Congress.
சந்திரபாபு நாயுடு... சந்திரசேகர ராவ்... ஸ்டாலின்... பிரதமர் நாற்காலி கணக்கு!

ஸ்.ஏ.எம். பரக்கத் அலி Vikatan : பிரதமர்
நாற்காலியைப் பிடிக்க மோடிக்கு சந்திரசேகர ராவும் ராகுலுக்கு சந்திரபாபு நாயுடுவும் துணை செய்கிறார்களா? `சந்திர’ங்களின் சதுரங்கம் வெற்றியில் முடியுமா? பி.ஜே.பி. காங்கிரஸ் நடத்தும் அரசியலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்?
சந்திரபாபு நாயுடு ராகுல் காந்திதேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ஸ்டாலின் – சந்திரசேகர ராவ் சந்திப்பு என அரசியல் மேகங்கள் சூழ ஆரம்பித்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் மே மாதத்துக்கும் எப்போதுமே தொடர்புண்டு. 2004, 2009, 2014 எனக் கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுமே மே மாதத்தில்தான் வெளியாகின. இந்தத் தேர்தலிலும் அது தொடர்கிறது. தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், தேர்தலுக்கு பிந்தைய மாற்று அணியை அமைப்பதற்கான `மூவ்’-ஐத் தொடங்கியிருக்கிறார்.
மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியைக் கடந்த ஆண்டே முன்னெடுத்தார் சந்திரசேகர ராவ். மம்தா, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்புகளின் வரிசையில் கருணாநிதியையும், ஸ்டாலினையும் 2018 மே மாதத்தில் சந்தித்தார். வீட்டில் விருந்து அளித்து, சந்திரசேகர ராவை உபசரித்தார் அப்போதைய தி.மு.க. பொருளாளரான ஸ்டாலின். கடந்த ஆண்டு வீட்டில் கைநனைக்க வைத்த சந்திரசேகர ராவை இந்த ஆண்டு மே மாதம் கால்பதிக்கக்கூட அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, ஒருவழியாக சந்திரசேகர ராவ் – ஸ்டாலின் சந்திப்பு நடந்தேறியுள்ளது.

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு, 2004-ல் இதே மே மாதத்தில் சந்திரசேகர ராவுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே உணர்ச்சிபூர்வமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., முஸ்லிம் லீக் கட்சிகளுடன் 2004 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க. கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. மத்தியில் அப்போது அமைந்த மன்மோகன் சிங் ஆட்சியில் தி.மு.க இடம்பெற்றபோது, கூட்டணியில் உரசல். தி.மு.க சார்பில் ஏழு பேர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். அவர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக அதிருப்தி தெரிவித்தார் கருணாநிதி. இதனால், தி.மு.க. அமைச்சர்கள் பொறுப்பேற்கவில்லை. `டி.ஆர்.பாலுவுக்கு நெடுஞ்சாலைத் துறையோடு கப்பல் போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ். ஆனால், கப்பல் போக்குவரத்துத் துறையை காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவுக்கு தரப்பட்டது. இதேபோல தி.மு.க. இணை அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கு நிதித் துறைக்குப் பதிலாக வர்த்தகத் துறை ஒதுக்கப்பட்டதையும் தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கருணாநிதி, மே 23-ம் தேதி அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், `தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன ரெட்டி அளித்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. இந்த குதர்க்கத்திற்கு யார் காரணகர்த்தா என்பது தெரிந்து, இந்தப் பிழை திருத்தப்படும் வரை தி.மு.க. அமைச்சர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்’ என்றார்.
ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு
தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதித் துறை கேபினட் அமைச்சராகவும், மணிசங்கர் அய்யர் பெட்ரோலிய துறை கேபினட் அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார்கள். நிதித் துறையின் கீழுள்ள வருவாய்த் துறையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரிடம் தரக் கூடாது. அதாவது, பழனிமாணிக்கத்துக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக, இலாகா ஒதுக்கீட்டில் சிலர் விளையாடி விட்டார்கள் எனச் சர்ச்சை எழுந்தது. இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட கருணாநிதி, “இலாகா ஒதுக்கீடு பற்றி எட்டு நாள்கள் டெல்லியிலே தங்கி பேசி, விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை, சில பேர் மாற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சோனியா காந்தியையும், பிரதமரையும் சுற்றியிருப்பது நல்லதல்ல. இருவரையும் அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என்றார். “கும்பல் யார்?” எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, “அது ரகசியம்” என்றார். உடனே பத்திரிகையாளர்கள், “அதென்ன சிதம்பர ரகசியமா?” எனக் கொக்கி போட்டார்கள். “சிதம்பர ரகசியமோ, மாயவரம் ரகசியமோ, எனக்குத் தெரியாது” எனக் குதர்க்கவாதிகளை மறைமுகமாக அடையாளப்படுத்தினார் கருணாநிதி.
ஒருவழியாக நாடகம் முடிந்து அமைச்சரவையில் பங்கேற்றது தி.மு.க. டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறையையும் பழனி மாணிக்கத்துக்கு நிதித் துறையையும் ஒதுக்கினார்கள். அப்போது பிரச்னை முடிவுக்குவர முக்கியக் காரணமாக இருந்தவர் சந்திரசேகர ராவ். தனக்கு ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை தி.மு.க-வுக்கு விட்டுத் தந்தார் சந்திரசேகர ராவ். 2004 மே 25-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சந்திரசேகர ராவ், “கூட்டணியின் ஒற்றுமைக்காகக் கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுத் தருகிறேன்” எனச் சொன்னார். அன்றைக்குக் கூட்டணி ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சந்திரசேகர ராவ்தான், இப்போது புதுக் கூட்டணி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
1984 தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலக் கட்சிகளின் பங்கு நாடாளுமன்றத்தில் அதிகரித்தே வருகிறது. இந்தத் தேர்தலிலும் மாநிலக் கட்சிகள் முக்கிய ரோல் வகிக்கலாம். மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, மாற்று அணியை நிறுவுவதற்கான முயற்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. தேர்தலுக்குப் பிறகு அதிக இடங்களைப் பிடிக்கப் போகும் மாநில கட்சிகளை குறிவைத்து, இப்போது மம்தா, மாயாவதி, நவீன் பட்நாயக், தேவகவுடா ஆகிய தலைவர்களைச் சந்தித்தார் சந்திரசேகர ராவ். அதன் தொடர்ச்சியாக ஸ்டாலினையும் சந்தித்திருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சந்திப்புக்குப் பிறகு பேட்டி அளித்த ஸ்டாலின், மூன்றாவது அணியை முற்றிலும் புறந்தள்ளிவிடாமல்தான் கருத்துகளை வெளியிட்டார். ஆனால், பிறகு காங்கிரஸ் கூட்டணியில் ஐக்கியமாகி ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தார் ஸ்டாலின்.

பிரதமர் ஆசை யாருக்கு இல்லை. 17 எம்.பி-க்களை மட்டுமே கொண்ட சிறிய மாநிலமான தெலங்கானாவின் சந்திரசேகர ராவுக்கும் அந்த ஆசை இருக்கும். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வென்று, இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து அரசியல் ரீதியாக வலுவடைந்திருக்கும் சந்திரசேகர ராவுக்கு பிரதமர் நாற்காலி மீது எப்போதும் ஒரு கண் உண்டு. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது எனக் கணக்குப்போட்டு, 1996 தேர்தலில் தேவகவுடாவுக்கு பிரதமர் யோகம் அடித்தது போல தனக்கும் அடிக்கலாம் என நம்புகிறார் சந்திரசேகர ராவ். அதற்குக் காரணம் அவர் நம்பும் ஜோதிடம். தேவகவுடாவை அன்றைக்குப் பிரதமராக முன்மொழிந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் ஸ்டாலின் அதேபோல் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தன்னை வழிமொழிவார் என நினைக்கிறார் சந்திரசேகர ராவ்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மாநில முதல்வர்களின் செயல்பாடு பற்றி சி வோட்டர்ஸ் ஐ.ஏ.என்.எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் சந்திரசேகர ராவுக்கு முதலிடம் கிடைத்தது. எடப்பாடிக்குக் கடைசி இடம் கிடைத்தது வேறு. தெலங்கானாவில் சிறப்பாகச் செயல்பட்ட தன்னால், இந்தியாவையும் வழி நடத்த முடியும் என்பதை பூடகமாகப் பேசியும் வருகிறார். அதன் வெளிப்பாடுதான் இந்தியிலும் பேச ஆரம்பித்திருப்பது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் கலந்து பதில் அளித்தார். `அடுத்த பிரதமராக பொறுப்பேற்கத் தயார்?’ என்பதற்கான சிக்னல்கள் இவை.
“அரசியலின் அடுத்த வாரிசாக மகன் கே.டி.ஆர். ராவை வார்த்தெடுத்துவிட்டார் சந்திரசேகர ராவ். தன்னுடைய அமைச்சரவையில் மகனுக்கு இடமளித்த சந்திரசேகர ராவ், ஸ்டாலினைப் போலவே கட்சியின் செயல் தலைவராக கே.டி.ஆர். ராவை நியமித்தார். பிரதமர் நாற்காலிக்கு, தான் நகரக்கூடிய சூழல் எழுந்தால், மகனை மந்திரியிலிருந்து, முதல் மந்திரிக்கு நகர்த்தலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைப் பறிக்க நினைக்கும் சந்திரசேகர ராவின் ஆசைக்கு அடிநாதமாக இருப்பது ஆன்மிகம். அதையொட்டிய ஜோதிட ஜாதகம். ஸ்டாலின் சந்திப்பு தள்ளிப்போனபோது, ராமேஸ்வரம் கோயிலுக்குப் போய் வேண்டுதலையும் வைத்துவிட்டுப் போனார்.

சந்திரசேகர ராவுக்கு பிரதமர் ஆசை இருப்பது ஒரு பக்கம் என்றால், `அவர் பி.ஜே.பி-யின் சார்பாகச் செயல்படுகிறாரோ?’ என்கிற சந்தேகமும் பலமாக எழுப்பப்படுகிறது. “தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கும் முயற்சியை பி.ஜே.பி. மறைமுகமாக முன்னெடுக்கிறது. அதற்கான பகடைக்காயாகத்தான் சந்திரசேகர ராவ் இருக்கிறார். தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்காத கட்சிகளை, தேர்தல் முடிவுக்குப் பிறகு பி.ஜே.பி-யோடு அணி சேர்க்க வைக்கும் முயற்சிகளை எடுக்கிறார் சந்திரசேகர ராவ். மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயல்கிறார். அமித் ஷாவின் அமிக்கபிள் பிளான் இது. மோடி ஆட்சி அமையாமல் போனால், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதில் பி.ஜே.பி. உறுதியாக இருக்கிறது. மாநில கட்சிகளின் ஆதரவோடு வலுவான காங்கிரஸ் அரசு அமைந்துவிடக் கூடாது எனக் கணக்கு போடுகிறது. இதைத் தடுக்கத்தான் சந்திரசேகர ராவ் தலைமையிலான மாநில கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் அமர வெளியிலிருந்து ஆதரவு தரும் திட்டத்தோடுதான் இப்போதைய மூவ்களை பி.ஜே.பி. நடத்திக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதற்கு ஆதாரமாகப் பழைய ஃபிளாஷ்பேக் ஒன்றைச் சொல்கிறார்கள். 2009 எம்.பி. தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு மாற்றாக இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணியில் தெலங்கானா ராஷ்டிரீய சமிதி இடம்பெற்று, தேர்தலைச் சந்தித்தது. ஆனால், தேர்தல் முடிவதற்கு முன்பு `ஜம்புலிங்கம்’ ஆனார் சந்திரசேகர ராவ். அப்போது பஞ்சாபில் நடந்த பி.ஜே.பி. கூட்டணி மாநாட்டில் அதிரடியாக மேடையேறினார். “ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்குள் தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என பி.ஜே.பி உறுதி அளித்ததால் அணி மாறினேன்”’ என வியாக்கியானம் சொன்னார் சந்திரசேகர ராவ்.
சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.பி. சொன்ன கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. “மாநில கட்சிகள் 120 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலும் சில மாநிலக் கட்சிகள் இணைந்து, மத்திய அரசை அமைப்பதில் முக்கிய முடிவு எடுக்கும். இதற்காகத்தான் அந்தக் கட்சிகளுடன் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தொடர்பில் உள்ளது” என்கிறார். சந்திரசேகர ராவின் இந்த முயற்சியை முறியடிக்கக் காங்கிரஸும் தயாராகிவிட்டது. பி.ஜே.பி-க்கு எப்படி சந்திரசேகர ராவோ அதுபோல காங்கிரஸுக்கு சந்திரபாபு நாயுடு. சந்திரசேகர ராவின் எதிரியான சந்திரபாபு நாயுடுவைக் களமிறக்கியிருக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு 21-ம் தேதி எதிர்க் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் நாயுடு. “அதில் மூன்று ஆப்ஷன்கள் வைக்கப்படும்” என்கிறார் நாயுடு.

1. முதலில் காங்கிரஸ் தலைமையை ஏற்று ஆட்சி அமைப்பது.
2. காங்கிரஸையும் இணைத்துக்கொண்ட ஓர் ஆட்சி.
3. வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் ஆட்சி.
பிரதமர் நாற்காலியைப் பிடிக்க மோடிக்குச் சந்திரசேகர ராவும் ராகுலுக்கு சந்திரபாபு நாயுடுவும் துணை செய்கிறார்களா? ‘சந்திர’ங்களின் சதுரங்கம் வெற்றியில் முடியுமா? பி.ஜே.பி, காங்கிரஸ் நடத்தும் அரசியலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
vikatan.com

கருத்துகள் இல்லை: