வெள்ளி, 24 மே, 2019

திருமாவளவன் :தமிழகம் போல காங்கிரசோடு கைகோர்த்து செயல்பட்டிருந்தால் பாஜகவை ஒடசெய்திருக்க முடியும்

பாஜக வெற்றிபெற இதுதான் காரணம்: திருமாவளவன்மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் விசிக போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3,219 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றிபெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 24) திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். வெற்றிச் சான்றிதழை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அகில இந்திய அளவில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. சங் பரிவார் கைகளில் ஆட்சி போய்விடக் கூடாது என்று நினைத்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் அணி திரண்டது போல மற்ற இடங்களிலும் ஒன்று சேர்ந்து காங்கிரசோடு கைகோர்த்து செயல்பட்டிருந்தால் பாஜகவை புறமுதுக்கிட்டு ஓடச் செய்திருக்க முடியும். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததன் காரணமாக பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கி சிதறிவிட்டதால், அது பாஜக தனிப்பெரும்பான்மை பெறக் காரணமாகிவிட்டது.
மேலும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரி என்பது போல காட்டினார்கள்” என்றார்.
“தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பாஜகவின் அவதூறு பிரச்சாரங்கள் எடுபடவில்லை. தமிழகம் சமூக நீதிக்கான மண். பெரியார் போன்றோர் பக்குவப்படுத்திய மண். இங்கு சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். சாதி வெறியர்களும், மதவெறியர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரும்; தமிழ் நிலத்தில் ஒருபோதும் தாமரை மலராது” என்று விமர்சித்தவர், சிதம்பரம் தொகுதியில் என்னை வீழ்த்துவதற்காக 50-100 கோடி வரை கொட்டி இறைத்தார்கள். எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள். சாதி அரசியலை கூர்மைப்படுத்தினர். அனைத்தையும் தாண்டி மக்கள் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
சிதம்பரத்தில் வெற்றி தாமதமாக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “நான் வாக்கு எண்ணிக்கை நடந்த இடத்தில்தான் இருந்தேன் என்றாலும் ஏன் அவ்வளவு காலதாமதம் என்று விளங்கவில்லை. தேர்தல் பார்வையாளர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடக்கிறது, அதனை விரைவுபடுத்துங்கள் என்று இரண்டு மூன்று முறை கூறினேன். எண்ணிக்கை முடிவை துல்லியமாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக தாமதமாகிறது என்று தெரிவித்தனர். தபால் வாக்குகளையும் மாலைக்குப் பிறகே எண்ண ஆரம்பித்தனர். அதில் உள்நோக்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் தாமதத்திற்கான காரணம் ஏன் என்று புரியவில்லை” என்று தெரிவித்தார்.
பாமக உங்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதே என்ற கேள்விக்கு, “நான் எந்த சமூகத்திற்கு எதிராகவும் கேடு செய்ததில்லை. அனைத்துத் தரப்பு மக்களையும் மதிக்கிறவன், நேசிக்கிறவன். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவன் என்பதுபோல கடந்த இரண்டு தேர்தல்களில் திட்டமிட்டு என் மீது பாமக அவதூறு பரப்பியது. அந்த அவதூறு முறியடிக்கப்பட்டிருக்கிறது” என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: