வெள்ளி, 24 மே, 2019

ராகுல் காந்தி ; மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன்


tamil.news18.com : உத்தரப் பிரதேச அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணியை விட 50 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்திருக்கும் முக்கியமான தொகுதிகளில் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி. நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நான்காவது முறையாக அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.>கடந்த மூன்று முறைகளைப் போல அல்லாமல் இந்தமுறை காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் தலைவராக ராகுல் காந்தி தேர்தலைச் சந்திக்கிறார். அதனால், இந்தத் தொகுதி இன்னமும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிரமராவதற்கான வாய்ப்புள்ள ஒருவராகவும் ராகுல் காந்தி அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனாலும், இந்தத் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது.
விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட தொகுதி, அமேதி தொகுதி எப்போதும் காங்கிரஸின் கோட்டை. 1977-ம் ஆண்டு, நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இந்திரா காந்தி, கொண்டுவந்த அவசரநிலைக் காலகட்டம் முடிவுக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் தேர்தல் அது. நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிரான கடுமையான எதிர்ப்பு இருந்த காலம்.


அதனால், அமேதி தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் காந்தி, ஜனதா கட்சி வேட்பாளர் ரவிந்திர பிரதாப் சிங்கிடம் தோல்வியடைந்தார். பின்னர், மூன்று ஆண்டுகளில் 1980-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் காந்தி, தன்னைத் தோற்கடித்த ஜனதா கட்சி வேட்பாளர் ரவிந்திர பிரதாப் சிங்கைத் தோற்கடித்து அபார வெற்றி பெற்றார். விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்த நிலையில், அமேதி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, தொடர்ச்சியாக மூன்று முறை அந்த தொகுதியில் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு, 1998-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அமேதி தொகுதியை காங்கிரஸிடம் இருந்து பறித்தது பா.ஜ.க மீண்டும். பின்னர், ஒரே வருடத்தில் 1999-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, பா.ஜ.கவிடமிருந்து கைப்பற்றினார். அதன்பிறகு, 2004-ம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றுவருகிறார். 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரைவிட 2.90 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல, 2009-ம் ஆண்டு தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரைவிட 3.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். கடந்த முறை பா.ஜ.க சார்பில் தற்போதை மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணி களமிறங்கப்பட்டார். கடந்த முறை நாடு முழுவதும் மோடி அலை வீசிய நிலையில், அமேதியில் மிகுந்த தடுமாற்றத்திலேயே ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அதுவரையில், அமேதியில் 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க கடந்த முறை 3 லட்சம் வாக்குகளைப் பெற்று ராகுல் காந்திக்கு நெருக்கடி கொடுத்தது. இருப்பினும், ராகுல் காந்தி, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடந்தமுறை ராகுல் காந்திக்கு கடும் நெருக்கடி கொடுத்த, மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணியை பா.ஜ.க மீண்டும் களமிறக்கியுள்ளது. ராகுல் காந்திக்கு, ஆதரவாக, சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை. இருப்பினும், ராகுல் காந்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இல்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருந்துவந்தது. தோல்வி பயத்தின் காரணமாகத் தான் ராகுல் காந்தி வயநாட்டிலும் போட்டியிடுகிறார் என்று பா.ஜ.க குற்றம்சாட்டியது.

இந்தமுறை, ராகுல் காந்தியை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க தீவிர முயற்சி செய்துள்ளது. பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிதி இராணி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி வரவில்லை என்பதை பிரதானமான குற்றச்சாட்டாக பா.ஜ.க எடுத்துவைத்தது. தொலைந்துபோன எம்.பி(missing MP) என்று நோட்டீஸ் விநியோகம் செய்து பா.ஜ.கவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப அரசியல் என்ற வாதத்தையும், ஊழல் கட்சி என்ற வாதத்தையும் ராகுலுக்கு எதிராக பா.ஜ.க பிரச்சாரத்தில் பயன்படுத்தியது. பிரதமர் மோடியும், அமேதி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் சார்பில், அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேரடியாக மக்களைச் சந்தித்தும் வாக்குகளைச் சேகரித்தார். காங்கிரஸ் கட்சியின், அமேதி தொகுதி எம்.பிதான் பிரதமர் என்று கூறி பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையும், ராகுல் காந்தியின் வெற்றி உதவும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், ராகுல் காந்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று சொல்வதற்கில்லை. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அமேதி தொகுதிக்குள் வரும் இரண்டு நகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறமுடியவில்லை. அதேபோல, 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் நடைபெற்றது. மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது பா.ஜ.க.

அமேதி மக்களவைத் தொகுதிக்குள் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் வரும். ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அமேதி, டிலோய், ஜக்திஸ்புர், சலோன் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.கவும், கவுரிகன்ஞ் தொகுதியில் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றன. காங்கிரஸால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. எனவே, அமேதி தொகுதியில் காங்கிரஸை தோற்கடிக்க முடியாது என்று உறுதியாகக் கூறமுடியாது.

மற்றுமொரு முக்கிய அம்சம், உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியால் தான் விரும்பும் கூட்டணியை அமைக்க முடியவில்லை. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால், ராகுல் காந்தியால் கூட்டணி அமைக்க முடியவில்லை. அகிலேஷ் யாதவ்வும், மாயாவதியும் காங்கிஸை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டனர்.

எனவே, இத்தகையை நெருக்கடியில்தான் ராகுல் காந்தி அமேதி களத்தை எதிர்கொள்கிறார். இருப்பினும், தன் குடும்பத்தின் ஆஸ்தான தொகுதி மக்கள், தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்கினார் ராகுல் காந்தி. ஆனால், அந்த நம்பிக்கை தோற்றுப்போனது. பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிதி இராணியை விட 50 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடையும் நிலையில், தன் குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியில் தோல்வியைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி.

அதேநேரம், ராகுல் காந்தியால் தென்னிந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தொகுதியும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த தொகுதி கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு. கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதியும் நீண்ட காலமாக காங்கிரஸின் கோட்டைதான்.

ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தது, அரசியல் ஒரு எதிர்பாரத முடிவாக பார்க்கப்பட்டது. ராகுல் காந்தியின் முடிவுக்கு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தி, நேரடியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் குறிவைத்ததாகவே அவர்கள் கருதினார்கள். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவித்த சில மணி நேரங்களில் ராகுல் காந்தியைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

இருப்பினும், ராகுல் காந்தி, நான் மார்க்ஸிஸ்டை எதிர்க்க மாட்டேன். தென்னிந்தியாவின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று இங்கே போட்டியிடுகிறேன்’ என்று அறிவித்தார். வயநாடு தொகுதி, அதிகமான பழங்குடியினர்களைக் கொண்ட தொகுதி. இந்த தொகுதியில் வேலை வாய்ப்பு, ஏழ்மை உள்ளிட்டவை பிரதான பிரச்னைகளாக உள்ளன. இந்தத் தொகுதியில் இஸ்லாமியர்கள் 28 சதவீதமும், கிறிஸ்துவர்கள் 21 சதவீதமும் நிறைந்துள்ளனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சிகள்தான். வயநாடு தொகுதியில் 65 சதவிகித வாக்குகளுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனீரை விட 4 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெறும் நிலையில் உள்ளார்

கருத்துகள் இல்லை: