புதன், 13 பிப்ரவரி, 2019

வடக்கு கிழக்குவாழ் மலையக மக்களின் புதிய கட்சி அகதேசிய முற்போக்கு கழகம்


BBC : இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற இந்தியவம்சாவளி மக்களை ஒன்றிணைக்க “அகதேசிய முற்போக்கு கழகம்” எனும் அரசியல் கட்சி உருவாக்கப்படுள்ளது. கடந்த சில வருடங்களாக வவுனியாவில் இருந்து இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்துவந்த ‘வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது’ அகதேசிய முற்போக்கு கழகம் எனும் பெயரில் அரசியல்கட்சியாக தற்போது பதியப்பட்டுள்ளது.
இக்கட்சியின் தலைவராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா  நியமிக்கப்பட்டுள்ளார
“அகதேசிய முற்போக்கு கழகம்” எனும் அரசியல் கட்சியின் உருவாக்கம் தொடர்பில் அதன் தலைவர் எம்.பி.நடராயா கூறுகையில், “இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களை ஒன்றினைத்து அம்மக்களின் சமூக,பொருளாதார,அரசியல்,கலாசார விடயங்களை மேம்படுத்துவதே கட்சியின்முதன்மை நோக்கம்.

அத்துடன் ஒட்டுமொத்த தமிழ் இனம் சார்ந்த பொருளாதார,கலாசார விழுமியங்களை கட்டி எழுப்புவதுடன் கல்வி ,விளையாட்டு, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் மேம்பாட்டை ஏற்படுத்தி தமிழ் இனத்தின் தேசிய எழுச்சிக்கு வலுசேர்க்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவுள்ளது.” என்று தெரிவித்தார்.
“நாம் பிரிவினையை விரும்பவில்லை ஏற்கனவே பிரிந்திருக்கின்ற எமது இனத்தை ஒன்றினைப்பதே எமது நோக்கம். இந்த மக்கள் வடக்குகிழக்கு மக்களுடன் முழுமையாக ஒன்றிணையவில்லை. அல்லது இங்கு இருக்கின்றவர்கள் அவர்களை உள்ளீர்த்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாடு இருக்கிறது. எனவே இந்திய வம்சாவளி மக்களை ஒன்றினைத்து இங்கு வாழ்கின்ற மக்களுடன் இணைத்து தமிழ் இனத்தின் தேசிய எழுச்சிக்கு வலுசேர்பதே எமது கொள்கையாக இருக்கிறதே தவிர பிரிவினையல்ல.”
தேசிய இனப்பிரச்சனையை தீர்பதற்காக அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கபடுகின்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன் நாம் புதிய யுக்திகளையும் கையாளவுள்ளோம்.
எதிர்காலத்திலும் இனப்பிரச்சனை சார்ந்தவிடயங்களில் செயற்படுவதற்கும் எமது கட்சி தயாராக இருக்கிறது. அத்துடன் தேர்தலில் பங்குபெறுவது தொடர்பாக அந்தகால சூழலில் எமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து அது தொடர்பான முடிவுகளை எடுப்போம். அத்துடன் எந்த சந்தர்பத்திலும் பேரினவாதத்திற்கு கரம்கொடுக்கும் கட்சியாக இது இருக்காது” என்று தெரிவித்தார்.
குறித்த தரப்பினர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மீன் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இரண்டு ஆசனங்களையும் பெற்றிருந்ததுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. B.B.C News



கருத்துகள் இல்லை: