வியாழன், 14 பிப்ரவரி, 2019

உறவுகளை அணைத்துக்கொள்ள அனுமதிக்காத பண்பாடு எல்லாம் பண்பாடே அல்ல.

Shalin Maria Lawrence : உலக கட்டிபிடி தினம்
நான் தென் தமிழ்நாட்டில் விளிம்பு நிலை பெண்களிடையே பெண்கள் மீதான வன்முறை குறித்து பயிற்சி அளிக்கும்போது கடைசியாக பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடிக்கும் செஷன் ஒன்று வைப்பேன்.அது மிகவும் இறுக்கமாக இருக்கும் அவர்களை தளர்விப்பதற்காக செய்யும் பயிற்சி.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல பெண்கள் கட்டிபிடிக்க அவ்வளவு கூச்ச படுவார்கள்.
"என்னமா உங்க வீட்ல யாரையும் கட்டி பிடிச்சததில்லயா?"
இல்ல மேடம்.
"உங்க புருஷருங்களாவது?"
இல்ல மேடம்.
பிறகு இது தொடர்பாக ஒரு சிறு ஆய்வு செய்யும்போது கிட்டிய தகவல்.அதிர்ச்சி.
கணவர்களில் பெரும்பாலானோர் மனைவிகளை கட்டி பிடிப்பதுமில்லை ,முத்தம் கொடுப்பதுமில்லை.
கலவி நேரத்தில்? அப்பொழுதும் இல்லை.
வெறும் கலவி மட்டுமே.என்கிற பதில் வந்தது.
இந்த நாட்டின் பெண்கள் எவ்வளவு சபிக்கப்பட்டவர்கள்.
அறிவியல் சொல்லுகிறது.கட்டி பிடிக்கும்போது மன அழுத்தம் குறைகிறதாம் ,தசை இறுக்கம் குறைந்து தளர்வடைகிரதாம் ,தன்னம்பிக்கை பிறக்குமாம் ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம் ,மனம் சந்தோஷமாக இருக்குமாம்.
ஆக மேல் சொன்ன அத்தனை நல்ல விஷயத்தில் இருந்து இந்த ஆண்கள் பெண்களை மட்டுமல்ல தங்களையும் விளக்கி கொள்ளுகிறார்கள்.
மேலை நாடுகளில் கட்டி பிடித்தல் என்பது கிளர்ச்சி கிடையாது.அது அன்பை பகிர்வதற்கான மிக எளிமையான ஒரு வழிமுறை.
ஆனால் இங்கே கட்டிபிடிப்பு அசிங்கம்.

சரி சொந்தம் பந்தத்தை தான் கட்டிபிடிக்க முடியவில்லை...கட்டுன பொண்டாட்டிய கட்டிபிடிக்க முடியாத ஆண்கள் இருந்தால் என்ன இல்லனா என்ன?
சிலருக்கு இது அபத்தமாக தெரியலாம், அப்படி எல்லாம் இல்லை நாங்கள் கட்டி பிடிக்கிறோம் என்று சொல்லலாம்.நான் இங்கு முகநூல் தாண்டிய வாழ்க்கைகளை பார்க்க சொல்லுகிறேன்.
இங்கே நாம் மைனாரிட்டி.
இது தாண்டி ஒரு சமூகம் இருக்கிறது அது இந்த கட்டுரையை வாசிக்க கூட செய்யாது.அவ்வளவு இறுக்கம்.அவ்வளவு இறுக்கம்.
கலாச்சாரம் ,பண்பு பேசுபவர்கள் அன்பு பகிர்தலை இன்னும் கலாச்சாரமாகவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் "free hugs" எங்குற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். தெரியாதவர்கள் கூட ஒரு 5 sec அன்பாக கட்டி பிடித்து கொள்ளுகிறார்கள்.
அங்க மனுஷன மனுஷன் நம்புறான் சார்...ஒழுக்கமா இருக்கானுங்க.
இங்கே அதே மாதிரி பண்ணா இல்லாத சில்மிஷம் பண்ணுவானுங்க ,கலாச்சாரன்ற பேர்ல இங்கே ஒழுக்கம் இல்லாம இருக்கான்.
அது கூட இல்லை...கட்டி புடிச்சா கற்பு போய்டுன்னு சொல்லுவான் ,என்னவோ கற்பு அக்குள்லதான் இருக்க மாதிரி.
கட்டிபிடித்தல் என்பது
நாம் ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கை.
நான் இன்னொருவரின் பிரச்சனைகளை நம் முதுகுவழியாக பங்கு போட்டு கொள்ளுவது.
வலியுள்ள ஜீவன்களை கட்டிப்பிடித்து முதுகை தேய்த்து கொடுக்கும் போது அவர்கள் நெகிழ்ச்சியை உணர்திருக்கிறீர்களா?
இங்கெ ஒவ்வொரு உயிரும் ஒரு தொடுத்தலுக்காக ஏங்கி கிடக்கிறது.கட்டிபிடித்தல் என்பது உடலின் மூலம் உயிரை தேற்றுவது.
மொதல்ல வீட்டுல இருக்க மனைவியோ ,புருஷனோ அடிக்கடி கட்டி புடிக்கனும் சார்.கலவி இல்லாத நேரங்களில் கூட.
உறவுகளை அணைத்துக்கொள்ள அனுமதிக்காத பண்பாடு எல்லாம் பண்பாடே அல்ல.

கருத்துகள் இல்லை: