வியாழன், 14 பிப்ரவரி, 2019

ரகசிய காப்புச் சட்டத்தில் மோடியைக் கைது செய்யுங்கள்; அனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்படுகிறார்'' - ராகுல் காந்தி காட்டம்

டெல்லியில் நடந்த ஊடகச் சந்திப்பில் மின் அஞ்சல் குறித்த விவரத்தை வெளியிட்ட ராகுல் காந்தி : படம் ஏஎன்ஐ புதுடெல்லி
THE HINDU TAMIL :
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரியும் முன்பே, அனில் அம்பானிக்குத் தெரிந்துவிட்டது. ரகசிய காப்புச் சட்டத்தில் மோடியைக் கைது செய்ய வேண்டும். அவர் அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாகப் பிரதமர் மோடி, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு உதவுகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. ஆனால், இதை அனில் அம்பானி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ரஃபேல் ஒப்பந்தம் குறித்து இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடக்கும் முன்பே இது குறித்து தொழிலதிபர் அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம் கையொப்பம் ஆவதற்கு 10 நாட்களுக்கு முன், அனில் அம்பானி, பிரான்ஸ் சென்று பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். அப்போது இந்த ஒப்பந்தம் குறித்தும், நீங்கள் இதைப் பெறப்போகிறீர்கள் என்பதையும் அனில் அம்பானிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லட்டும்.
ரஃபேல் ஒப்பந்தம் கையொப்பமாவதற்கு 10 நாட்களுக்கு முன், எவ்வாறு அனில் அம்பானிக்குத் தெரியவந்தது? பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தெரியவில்லை, பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியவில்லை, பிரதமருக்கு மட்டுமே ரஃபேல் ஒப்பந்தம் தெரியும் என்று நினைத்த வேளையில் இப்போது அனில் அம்பானிக்கும் தெரிந்திருக்கிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் (எச்ஏஎல்), வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தெரியவில்லை. ஆனால், அனில் அம்பானிக்குத் தெரிந்துவிட்டது. இது தொடர்பாக ஏர்பஸ் அதிகாரி பிரான்ஸ் அதிகாரிக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார்.
இந்த விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரகசிய காப்புச் சட்டத்தை பிரதமர் மோடி மீறியுள்ளது உண்மையாகும். அவரை ரசகிய காப்புச் சட்டத்தை மீறிய வகையில் கைது செய்யலாம். ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் பிரதமர் மோடி செயல்படுகிறார்.
பிரதமர் மோடி செய்துள்ளது, ராஜ துரோகம். யாருக்காக மோடி உளவு பார்க்கிறார். யாரோ சிலருக்காகப் பாதுகாப்பு அமைச்சக விவரங்களைச் சொல்கிறார். ரஃபேல் ஊழல் ஒப்பந்தத்தில் ஊழல், கொள்முதல், தேசப் பாதுகாப்பு ஆகிய 3 விஷயங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தையும் நாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். யாரும் தப்பித்துவிடக்கூடாது.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றமே, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வராது எனத் தெளிவாகக் கூறிவிட்டது. ஆதலால், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த மத்திய கணக்குத் தணிக்கையை அறிக்கையைப் புறக்கணிக்கிறோம். மத்திய தணிக்கை அறிக்கை உதவாத அறிக்கை. காவல்காரரின் தணிக்கை அறிக்கை, காவல்காரருக்காக எழுதப்பட்ட அறிக்கை, காவல்காரருக்காக காவல்காரரால் எழுதப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: