சனி, 16 பிப்ரவரி, 2019

டி.கே ராஜேந்திரன்- பழனிசாமி கூட்டணி" .. முதல்வர்-டிஜிபி ஊழல் கூட்டணி: ஸ்டாலின்

முதல்வர்-டிஜிபி ஊழல் கூட்டணி: ஸ்டாலின்சென்னையிலும், திருச்சியிலும் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக இன்று (பிப்ரவரி 16) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியானது. இதை மேற்கோள் காட்டி தமிழகத்தில் முதல்வர் -டிஜிபி ஊழல் கூட்டணி அமைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இதுபற்றி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆப்கோ பிராஜெக்ட்' என்ற பெயரில் காவல்துறையை நவீனமயமாக்கும் நிதியில் இருந்தும் மாநில அரசின் நிதியிலிருந்தும் செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான டெண்டர் முறைகேடுகள் அ.தி.மு.க அரசின் கரி பூசிய ஊழல் முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறது. 2012ல் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் 38 கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டியது. ஆனால், அ.தி.மு.க அரசின் கஜானாவில் கொள்ளையடிக்கும் கலையால் இந்தத் திட்டத்தின் மதிப்பு இன்றைக்கு 88 கோடி என்று உயர்ந்து அதிலும் மாபெரும் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது.

இந்த டெண்டரில் ஒரே ஒருவரிடம் ஒப்பந்தம் பெற்று அவருக்கே கான்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவரிடம் "Dealer possession licence" எனப்படுகிற லைசென்ஸ் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,
“சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் இந்த ரேடியோ டிஜிட்டல் சிஸ்டம் இயங்காது. ஆனால் டெண்டரின் முக்கிய நோக்கமே சுரங்கப்பாதைகளிலும் இந்த சிஸ்டம் செயல்பட வேண்டும் என்பதுதான்! இந்த டெண்டர் போட்டவர் என்ன விலை கேட்டாரோ அந்த அதிக விலையை எவ்வித தயக்கமுமின்றி டி.ஜி.பி திரு டி.கே ராஜேந்திரன் அளித்திருக்கிறார். டெண்டர் போட்டவருடன் முறைப்படி நடத்த வேண்டிய விலை குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தி விலையை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டெண்டரில் செலுத்த வேண்டிய வரி பொறுப்புகளை ஒப்பந்ததாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டெண்டர் விதிகள் இருந்தபோதிலும் அவருக்கு ஜி.எஸ்.டி தனியாக 5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெண்டரில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பல மடங்கு அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது. "மொபைல் equipment" தொடர்பான சாதனங்களிலும் "handheld device" தொடர்பான சாதனங்களிலும் மட்டும் 23 கோடி ரூபாய்க்கு மேல் அதிகம் ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டு அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி வரலாறு கண்டிராத டெண்டர் முறைகேடுகள் செய்து அரசுக்கு 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவிற்கு டி.ஜி.பி திரு டி.கே ராஜேந்திரனும் இந்தத் துறையை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஊழல் செய்திருப்பது வேதனையானது மட்டுமல்ல - வெட்கக்கேடானது. இந்த சட்டவிரோத சலுகைகளையும் அப்பட்டமான விதிமீறல்களையும் உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டி டி.ஜி.பியிடம் கேள்வி எழுப்பிய பிறகும் இந்த டெண்டரை முறைகேடாக அளித்திருக்கிறது "டி.கே ராஜேந்திரன்- பழனிசாமி கூட்டணி" என்று கூறியுள்ளார்.
குட்கா முறைகேடுகளை நினைவுபடுத்தியுள்ள ஸ்டாலின், “ஏற்கனவே குட்கா ஊழலில் சி.பி.ஐ ரெய்டுக்கு உட்பட்ட டி.கே ராஜேந்திரனை தொடர்ந்து பதவியில் நீடிக்க வைத்திருப்பது இப்படி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கத்தான் என்பது இந்த டெண்டர் முறைகேடு மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. 88 கோடி ரூபாய் "டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்" டெண்டரில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்

கருத்துகள் இல்லை: