சனி, 16 பிப்ரவரி, 2019

மோடி : ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம் ... மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்

மோடி ஆவேசம் tamil.oneindia.com - veerakumaran :
 டெல்லி: மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.. தக்க விலை கொடுத்தாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிரங்கமாக எச்சரிக்கைவிடுத்தார்.
காஷ்மீரில் நேற்று, சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகு, டெல்லியில் நடைபெற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழாவில் நரேந்திர மோடி பங்கேற்றார். 2 நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு மோடி உரையை துவக்கினார். அவரது உரை முழுக்க பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கைவிடுப்பதை போல இருந்தது.
 மோடி ஆவேசம்
பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீரில் நமது வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை தெரிவித்த உலக நாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டனர். அவர்களும், அதன் பின்னணியில் இருப்பவர்களும், இதற்காக மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
முழு சுதந்திரம்
இந்த சூழ்நிலையில், இந்தியாவின் பதிலடியை நாடே எதிர்பார்ப்பது இயல்பானது.
நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டது. நமது ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
நமது அண்டை நாடு, உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சதிகளால், இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்கலாம் என நினைத்தால், அதுதான் அவர்களின் மிகப்பெரிய தவறாக மாறப்போகிறது. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.

 பொது வெளியில் இந்திய பிரதமர் ஒருவர், இவ்வாறு கடும் எச்சரிக்கை பிறப்பித்தது இதுதான் முதல் முறை. ஏறத்தாழ பாகிஸ்தானுக்கு எதிரான போர் பிரகடனமாகவே இது பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: