வியாழன், 14 பிப்ரவரி, 2019

பாலியல் புகார் ஐஜி முருகன் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் புகார் ஐஜி முருகன் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!மின்னம்பலம் : தமிழகம் முழுவதும் உள்ள உயரதிகாரிகளின் தனி அறைகள், அரசு அலுவலகங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தத் தலைமை செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். இந்தப் புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தப் பரிந்துரைத்தது.
விசாகா குழுவில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதியை நியமிக்கக் கோரியும், முருகனை பணிமாற்றம் செய்யக் கோரியும் புகார் கூறிய பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் புதிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், தனக்கு எதிரான சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போலீஸ் துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீ லஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா குழு, தன் விசாரணையை முடித்து இரண்டு வாரக் காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஐஜி முருகனுக்கு எதிராகப் பணிகள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
உயரதிகாரிகளுக்கு எதிரான புகார்களை தவிர்க்கவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண் அதிகாரிகள், பணியாளர்களைப் பாதுகாக்கவும் உயர் அதிகாரிகளின் அறைகளிலும், அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமெனத் தலைமை செயலாளருக்குப் பரிந்துரைத்த நீதிபதி, தானும் அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தியின் வார்த்தைகளின் படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உயர் நீதிமன்ற நிர்வாகப் பிரிவு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது, முதலில் ஐஜி முருகன் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக இரவு நேரங்களில் என்னைத் தொடர்பு கொண்டு பேசுவார். பின்னர் சில நாட்களிலேயே இரவு நேரங்களில் அழைத்துத் தனிப்பட்ட கேள்விகளையும், கருத்துகளையும் தெரிவிப்பார். இதைதொடர்ந்து அவருடைய அறைக்கு அழைத்துத் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பது என்னுடைய ஆடை மற்றும் ஹேர் ஸ்டைல் குறித்து கருத்து தெரிவிப்பார். அவருடைய அறைக்குள் நுழைந்தால் என்னுடைய எதிர்ப்பையும் மீறி புகைப்படம் எடுப்பார். இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்தால் வேலையில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவார். பணி நேரம் முடிந்து வாட்ஸ் அப்பில் தொடர்ந்து 20 முதல் 25 முறை அழைப்பு விடுத்துத் துன்புறுத்துவார் என்று தெரிவித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் அவரது அறைக்கு அழைத்து அறைக் கதவை அடைத்து விட்டு, தனிப்பட்ட கேள்விகளை கேட்டார். அவருடைய நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கதவைத் திறந்து வெளியே வர முயலும் போது கட்டிப்பிடித்ததாகவும் பின்னர் உயரதிகாரியைத் தள்ளிவிட்டு வெளியே வந்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தான் ஐஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 14) உத்தரவிட்டிருக்கிறது.
ஐஜிக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், இதனால் முருகன் அப்பெண் அதிகாரியின் சமூகத்தை சேர்ந்த சில அதிகாரிகள் மூலம் சமாதானம் பேச முயற்சிப்பதாகவும் அப்பெண் அதிகாரியின் நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
”இதுவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி ஒரு புகார் அளித்ததற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து சிறைக்கு அனுப்பியிருப்பார். ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த அரசு பாலியல் புகாரைக் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. ஆனால் காலதாமதமானாலும் நீதித்துறை சார்பில் ஐஜி முருகனுக்குக் கடுமையான தண்டனைக் கிடைக்கும்” என்று பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. நம்புவதாகவும் கூறுகின்றனர்.
நீதிகிடைக்க வேண்டும் என்று சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் அவர் போராடி வரும் நிலையில் அவருக்கு மற்ற காவல்துறை அதிகாரிகளும் உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
சிசிடிவி மட்டுமே தீர்வு கிடையாது
”உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதனால் மட்டும் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று கூற முடியாது. உயரதிகாரிகள் பல விதத்திலும் தொல்லை செய்வார்கள். பணி இருப்பதாகக் கூறி வேறு வேறு இடங்களுக்கு வரச் சொல்வார்கள்” என்று காவல்துறையில் பணிபுரியும் சில பெண் அதிகாரிகள் கூறுகின்றனர்.
”திருமணமான பெண்களும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள். அவர்களை இவ்வாறு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்யும் போது, பாதிப்புகள் எதாவது ஏற்படுமோ என்று வெளிப்படையாக வெளியில் சொல்ல தயங்குகின்றனர். காரணம், கணவர் அல்லது உறவினர்கள் சந்தேகப் பார்வையில் பார்ப்பார்களோ, சமுதாயத்தில் இழிவு ஏற்பட்டுவிடுமோ என எண்ணுகின்றனர். இந்தச் சூழலில் எல்லை மீறி தொந்தரவு செய்ததன் காரணமாகவே, அந்தப் பெண் எஸ்.பி வெளிப்படையாகப் புகார் செய்திருக்கிறார். இவ்வாறு காவல் துறை அதிகாரி அளித்த புகாருக்கே துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மற்ற துறையில் இருந்து பெண்கள் புகார் அளித்தால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்” என்ற கேள்வியையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.
”பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளித்த போதே இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால். அவர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருந்திருக்காது. ஊடகங்களில் இதுதொடர்பாக செய்திகள் வந்திருக்காது” என்றும் கூறுகின்றனர் காவல் துறையில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள். ”சிபிசிஐடியில் சில நேர்மையான அதிகாரிகள் இருப்பதாகவும், இதனால் ஐஜி முருகன் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது” எனவும் காவல்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
ஐஜி முருகனுக்கு எதிராகப் பெண் எஸ்.பி. யிடம் முக்கியமான ஆதாரங்கள் பல இருப்பதால் அவர் மீதான விசாரணை தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரித்து வரும் ஐஜி முருகனை பணியிடை மாற்றம் செய்யலாமா அல்லது அதே துறையில் வைத்துக் கொண்டு விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை: