வியாழன், 17 ஜனவரி, 2019

மோடியின் ஸ்பெக்ட்ரம் ஊழல்! - காங்கிரஸ் புகார்!

minnambalam :மைக்ரோவேவ்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மோடி
அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதாகத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸை ஆட்சியிலிருந்து பாஜக அகற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து வெளியேறி ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறுகிய தொலைவுக்கு மொபைல் சேவைகளை வழங்குவதற்காக அவர்களுக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீட்டால் மத்திய அரசின் கருவூலத்துக்கு ரூ.69,381 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை குறித்த தலைமை கணக்காயரின் (சிஏஜி) அறிக்கை ஜனவரி 8ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கு ஏல முறையை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அரசு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
எந்த நிறுவனத்துக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களையும், இழப்பீட்டுத் தொகையையும் தலைமை கணக்காயர் குறிப்பிடவில்லை. எனினும், ரூ.69,381 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரான பவன் கேரா தெரிவித்துள்ளார். மேலும், இந்த இழப்பீடு மதிப்பீடுகள் உத்தேசமானவையா அல்லது உண்மையானவையா என்று முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராயிடம் பவன் கேரா கேள்வியெழுப்பியுள்ளார்.
சிஏஜி அறிக்கையில், “குழுவின் பரிந்துரைகளை மீறும் விதமாக, 2ஜி உரிமம் வழங்கப்படுவதற்குக் கடைப்பிடிக்கப்பட்ட முறையைப் போலவே மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சில முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விருப்பத்துக்கு இணங்க, அரசுக்கு வந்துசேர வேண்டிய பணத்தை மோடி அரசு தவிர்த்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி அண்மையில் தனது ஆட்சிக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்று கூறினார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சியில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை மீறும் வகையில் மோடி அரசாங்கம் முதலில் வருபவருக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத் தொகை வசூலிப்பது ஆறு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.23,821 கோடிக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: