வியாழன், 17 ஜனவரி, 2019

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசுமாலைமலர் : உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த போட்டியில் 40 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். #Jallikattu #AlanganallurJallikattu மதுரை:தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன.

வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறைகள் முடிந்தபின்னர் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. பொங்கல் தினத்தன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.<
வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கினர். இந்த போட்டியில் 730 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.  படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 15 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த காளையாக தேர்வான பரம்பப்பட்டி செல்லியம்மன் கோவில் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாலையில் நடைபெற்ற இறுதிக்கட்ட விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: