வெள்ளி, 18 ஜனவரி, 2019

100 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: அமைச்சர்!

100 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: அமைச்சர்!மின்னம்பலம் : “என்னுடைய புரிதலின்படி, இதுவரை 100 பெண்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்திருக்கலாம்” என கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 17) கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இதுவரை 100 பெண்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ஆனால், தரிசனம் செய்த பெண்களின் வயது மற்றும் இதர விவரங்கள் தேவசம் போர்டு வசமோ, மாநில அரசு வசமோ இல்லை என்று கூறினார்.

“பக்தர்கள் என்ற போர்வையில் இருக்கிற குண்டர்கள்தான் பெண்களைச் சபரிமலைக்குச் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். சமூக விரோதிகள், குண்டர்கள் மூலம் வன்முறைகள் நடந்தாலும், போலீஸ் துறை கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. புதன்கிழமையன்று வந்த பெண்கள் ஒரு குழுவாக வந்ததால், எதிர்ப்பாளர்களின் கவனம் அவர்கள் மீது சென்றது. எந்தப் பெண்ணும் சபரிமலைக்கு வர விரும்பினால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் காவல் துறை வழங்கும். சபரிமலையில் இத்தகைய நடவடிக்கைகள் தேவைதானா என்பது குறித்து வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் சிந்திக்க வேண்டும். சங் பரிவாரின் எந்தவொரு வெறித்தனத்தையும் செயல்படுத்தும் சூழ்நிலையை போலீஸோ, அரசாங்கமோ உருவாக்காது” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: