சனி, 19 ஜனவரி, 2019

கொல்கத்தா பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின்.. விடியோ : மோடி மீண்டும் வந்தால் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும்


 "இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுத்த வீரமிக்க இனங்களில் வங்காளமும், தமிழகமும் முக்கியமானது. இதோ இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போராட்டத்திற்காக வங்கத்துச் சகோதரி மம்தாவின் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறேன். வங்கத்துப் புலிகளே! இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான் மே மாதம் நடக்கவிருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து, மக்களிடம் மோதலை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் நச்சு சக்தியான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து நாட்டை மீட்பதுதான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று நான் சொல்கிறேன்." - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
மின்னம்பலம் : கொல்கத்தா பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பிரதமர் மோடி பயந்து புலம்புகிறார்” என்று தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று (ஜனவரி 19) மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒருசில கட்சிகளைத் தவிர பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான் வரும் மே மாதம் நடைபெற இருக்கக் கூடிய தேர்தல் என்னும் ஜனநாயக போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து மக்களிடையே மோதலை உண்டாக்கி மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்தியான பாஜகவிடமிருந்து நாட்டை மீட்பதைத்தான் சுதந்திர போராட்டம் என்று சொல்கிறேன். வேறு மாநிலத்தை, வேறு மொழியைக், வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். நம்முடைய சிந்தனை ஒன்றுதான். பாஜகவை வீழ்த்த வேண்டும், நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. இந்த ஒற்றுமை இருக்குமேயானால் நமக்கு வெற்றிதான், நரேந்திர மோடிக்கு தோல்விதான்.

சில மாதங்களுக்கு முன்புவரை எதிரிகளே இல்லாத இந்தியா, எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று பிரதமர் மோடி சொல்லிவந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்கிறார். எந்தக் கூட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்றுசேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்பதை விட, அவருக்கு பயமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்தால் வீழ்ந்துபோவோம் என்று அவருக்கு தெரிந்துள்ளது. அதனால்தான் பயத்தால் புலம்புகிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மோடியை பயம்கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமையைக் காப்போம், அதன்மூலம் இந்தியாவை காப்போம்.
தான் ஆட்சிக்கு வந்தாலும் தேனாறும் பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி. நூறு கூட்டத்தில் பேசினால் ஆயிரம் பொய்களை சொல்லியிருப்பார். அவர் சொன்னதில் மிகப்பெரிய பொய், தான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டுவந்து மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்பதுதான். ஆனால் தலையில் கல்லையும், வாயில் மண்ணையும் போட்டு நாட்டு மக்களைக் குழிக்குள் தள்ளினார்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர், காய்கறிகள், மளிகைச் சாமான்கள் விலை உயர்ந்தது. வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது, பசியால் துன்பப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்தது, குடிசையில் வாடுவோர் எண்ணிக்கை உயர்ந்தது. இதுதான் உலகம் சுற்றும் மோடியின் சாதனைகள். இது மக்களுக்கான ஆட்சியல்ல. கார்பரேட்டுகளுக்கான, பெரு நிறுவனங்கள், முதலாளிகளுக்கான ஆட்சி. அரசை பிரவேட் லிமிட்டேட் ஆக மாற்றிவிட்டார். கார்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது.
எனது ஆட்சிதான் ஊழல் இல்லாத ஆட்சி. எங்கள் மீது யாரும் ஊழல் புகார் சொல்ல முடியாதென்று சில நாட்களுக்கு முன்பு மோடி கூறியுள்ளார். அவர் இந்தியாவில் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ரஃபேல், ரஃபேல் என்று 6 மாதங்களாக கூறிவருகிறோமே அது ஊழல் இல்லாமல் வெறேன்ன? அரசு நிறுவனத்திற்கு கொடுக்காமல் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை கொடுப்பது ஊழல் இல்லாமல் வெறேன்ன? மல்லையா தப்பிச் செல்வதற்கு முன்பு அருண் ஜேட்லியை பார்த்துவிட்டுச் செல்கிறார். இது ஊழல் இல்லாமல் வேறேன்ன? லலித் மோடியை இந்தியாவை விட்டு தப்பிக்க விட்ட சுஷ்மா சுவராஜின் செயல் ஊழல் இல்லையா? நிரவ் மோடியை தப்ப விட்டது ஊழல் இல்லையா? 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ததில் ஊழல் இல்லையா? யாருக்காக நோட்டுகள் தடை செய்யப்பட்டன. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? மோடி ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டது போல ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். மோடி ஒரு சிலரைப் பார்த்துப் பயப்படுவார், அப்படி அவர் பார்த்து பயப்படும் ஒருவர்தான் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும் அமித் ஷாவும் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி நடத்தி வருகிறார். இன்னும் 5 மாதத்துக்கு நாம் அனைவரும் இணைந்து மோடிக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இணைந்து பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. இது அவர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும், நமது ஒற்றுமை நம்மை வெற்றிபெற வைக்கும். நமது ஒற்றுமை இந்தியாவைப் பாதுகாக்கும்” என்று பேசி முடித்தார்.
ஸ்டாலின் பேசியவுடன் மைக்கைப் பிடித்த மம்தா பானர்ஜி, “நன்றி ஸ்டாலின் அவர்களே. உங்கள் தந்தையை நான் பெரிதும் மதிப்பவள், தமிழக மக்கள் அனைவரையும் மதிக்கிறேன்.வரும் தேர்தலில் நீங்கள் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி பெருவாரியான வெற்றிபெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பொதுக் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “இன்று ஒரு வரலாற்று நாள். நமக்கு ஒரே ஒரு லட்சியம் உள்ளது. அது இந்தியாவைக் காப்பாற்றுவது, ஜனநாயகத்தை காப்பாற்றுவது. பாஜக இந்தியாவை பிரிக்க முயல்கிறது.நாம் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும்”என்று உரையாற்றினார்.
“70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்ய முடியாததை மோடி - அமித்ஷா கூட்டணி 5 ஆண்டுகளில் நாட்டை பிளவுபடுத்திவிட்டது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்தார். “பாஜக எனும் பிரிவினை சக்தியை அழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “பாஜகவினர் அவர்களது கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவுவதிலேயே கவனத்தில் உள்ளனர். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தார்களே? அந்த வாக்குறுதி என்னவானது” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “தேசம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிறது. குடிமக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். அரசியல் ரீதியாத சுதந்திர அமைப்புகள் கைகட்டப்பட்டு கிடக்கின்றன. இந்திய அரசியலமைப்பை நிலைகுலையச் செய்யும் சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபடும்வரை மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தையும் மதச்சார்பற்ற பண்புகளையும் சிதைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய மம்தா பானர்ஜி, “மத்திய அரசு அனைத்து வரம்பு மீறலையும் செய்து வருகிறது. மோடியை போல் ஒரு தலைவர் இனி தேவையில்லை. மோடி ஆட்சியில் ஜனநாயகம் அழிந்துவிட்டது. எங்கள் அணியின் பிரதமர் யார் என்பதில் யாரும் இப்போது கவலைப்பட வேண்டாம். எங்கள் அணியில் உள்ளவர்கள் அனைவரும் தலைவர்தான். பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் அறிவிப்போம். நாட்டையே கொள்ளையடித்த பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: