வியாழன், 17 ஜனவரி, 2019

ராகுல் காந்தி தமிழகத்திலும் போட்டி ... சிவகங்கை அல்லது கன்யாகுமரி? அமேதியிலும் போட்டி!

vikatan.com : காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரும் பிரதமர்
வேட்பாளராகத் தி.மு.க தலைவர் ஸ்டாலினால் முன்மொழியப்பட்டவருமான ராகுல் காந்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிற்கப்போவதாகக் கிளம்பியுள்ள தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். 
வரும் நடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அனைத்துக்கட்சிகளும் தீவிரம்காட்ட ஆரம்பித்துள்ளன. மத்தியில் பி.ஜே.பி-க்கு எதிராக மதச்சார்பற்ற அணிகளை ஒன்று திரட்டும் வேலையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இடபெறும் வாய்ப்புள்ளது. கடந்த மாதம் கருணாநிதியின் சிலைத்திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியை “இந்தியாவின் பிரதமர் வேட்பாளர்” என்று முதலில் முன்மொழிந்தது ஸ்டாலின்தான். இந்த அறிவிப்பால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல்காந்தி. 

இந்திரா குடும்பத்தினர், நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிடுவதுதான் வழக்கம். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இப்போது ராகுல் மற்றும் சோனியா காந்தி எம்.பி-க்களாக உள்ளார்கள். வரும் தேர்தலில் ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. `உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொகுதியிலும், தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியிலும் போட்டியிடுங்கள்' என்று காங்கிரஸ் தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்கள். அப்படி தென்மாநிலம் என்று சாய்ஸ் வரும்போது தமிழகத்தைத் தேர்ந்தெடுக்கும் மனநிலையில் இருக்கிறாராம் ராகுல்.


`தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மீதான எதிர்ப்பலையும் பலம்வாய்ந்ததாக இருக்கும் தி.மு.க-வின் கூட்டணியும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கும்' என ராகுல் காந்தி கணக்குப் போட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்திடம் ஆலோசனை செய்துள்ளார் ராகுல். தமிழகத்தில் இரண்டு தொகுதிகளைக் குறித்துக் கொடுங்கள் என்று கேட்டதற்கு சிதம்பரம் தரப்பிலிருந்து கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை தொகுதிகளை ராகுல்காந்தியிடம் சொல்லியுள்ளார். சிவங்கை தொகுதியில் 30 ஆண்டுகளாக எம்.பி-யாக இருந்தவர் சிதம்பரம். மேலும், காங்கிரஸ் கட்சியும் ஓரளவு வலுவாக உள்ள தொகுதி. இந்தமுறை அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கைத் தொகுதியில் களம் இறக்கத் திட்டமிட்டிருந்தார் சிதம்பரம். ஆனால், ராகுல் நிற்பதற்கான யோசனை கேட்டபோது, தனது தொகுதியையே அவருக்கு டிக் செய்து கொடுத்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் தொகுதி கன்னியாகுமரி. இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நிற்கலாம் என்று சிதம்பரம் சொல்லியுள்ளாராம்.
பொங்கல் விழா கொண்டாட தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு வருகை தந்த கார்த்தி சிதம்பரம், தன் வீட்டில் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது “பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள். தலைவர் ராகுல் காந்தி ஒருவேளை சிவகங்கையில் போட்டியிடலாம். இதுகுறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. அப்பாவிடமும் இதுகுறித்து ராகுல்காந்தி பேசியுள்ளார்” என்று சொல்லியுள்ளார். இதைக்கேட்ட  நிர்வாகிகள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள். புதன்கிழமை அன்று பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்திலும் சூசகமாக இதே கருத்தைத் தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், “அப்படி ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அது எந்த அளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்று தெரியவில்லை. கார்த்தி சிதம்பரம்தான் இந்தத் தொகுதியில் நிற்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால்,  அவரே சிவகங்கையில் ராகுல் போட்டியிடும் வாய்ப்புள்ளது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியது உண்மைதான். பின்தங்கிய இந்தத் தொகுதியை ராகுல் தேர்வு செய்தால் இதைவிட இந்தத் தொகுதிக்கு வேறு என்ன நன்மை கிடைத்துவிட முடியும்" என்கிறார்கள் உற்சாகத்துடன்.

கருத்துகள் இல்லை: