வியாழன், 5 ஜூலை, 2018

உடன் பயணிப்போருக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்!

உடன் பயணிப்போருக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்!
மின்னம்பலம்: டூவிலரில் செல்பவர்கள் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்,மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவானி சுப்பராயன் அமர்வு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) வந்தது. இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக கண்காணிக்கப்பட்டு அதற்கான அபராதம் மற்றும் தண்டனை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாலை விதிகளை மீறுபவர்கள் அதிகரித்து வருவதாகவும், சாலை விதிகளை மதிக்காத போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டும் என்றார். தனியார் நிறுவனங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்ற வாசகம் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய நீதிபதிகள், இதுபோன்று காவல்துறை அலுவலகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பலகைகளை வைக்கலாம் என கருத்துத் தெரிவித்தனர். கட்டாய ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் எனக் கூறினர்.
மேலும்,`இருசக்கர வாகன ஓட்டிகள் வண்ண விளக்குகளை எரியவிடுவது எதிரில் வருபவர்களின் கண்களைக் கூசச் செய்கிறது அதனைத் தடுப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு எவ்வாறு பின்பற்றப்படுகிறது’’ என்பன குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைகளை நிறைவேற்றியது குறித்தோ அல்லது நிறைவேற்றத் திட்டமிட்டது பற்றிய முறையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை: