புதன், 4 ஜூலை, 2018

மதிமுக முப்பெரும் விழா ... ஸ்டாலின் வைகோ ... ஸ்டெர்லைட் விவகாரம் ஆலோசனை!


மறுமலர்ச்சியுடன் வைகோமின்னம்பலம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சில மாதங்களாக ஸ்டெர்லைட் நடைபயணம், காவிரி உரிமை மீட்புப் பயணம், போராட்டங்கள் என ஓய்வில்லாமல் தமிழகம் முழுவதும் சென்று வந்துகொண்டிருந்தார். இதனால் அவ்வப்போது சோர்வடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு கதிராமங்கலத்தில் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். இந்நிலையில் வைகோ,கேரள மாநிலம் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலாவில் ஜூன் 30ஆம் தேதி முதல் 17 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை முடிந்து புத்துணர்வுடன் திரும்பிய வைகோ, கடந்த 1ஆம் தேதி நடந்த நயினார் நாகேந்திரன் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஜூலை 4) சந்தித்துப் பேசினார் வைகோ.
அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, மதிமுக மாநில மாநாட்டுக்கு வரும்படி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்தும் பேசப்பட்டுள்ளது. சந்திப்பில் சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”செப்டம்பர் 15ஆம் தேதி ஈரோட்டில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க.வின் வெள்ளி விழா, என்னுடைய பொது வாழ்வு பொன்விழா ஆகிய 3 விழாவையும் இணைத்து மாநில மாநாடாக முப்பெரும் விழா மாநாடாக நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அவரும் இந்த மாநாட்டுக்கு வந்து பொன்விழா மலரை வெளியிட்டு முப்பெரும் விழாவில் பங்கேற்க இசைவு தந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது” என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனையும் வைகோ சந்தித்துப் பேசினார்.

கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த பின் மறுமறுமலர்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ முன்பை விட உற்சாகமாகவும், மறுமலர்ச்சியுடன் காணப்படுகிறார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: